இந்தியா-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்: “முதல் இன்னிங்சில் 320 ரன்கள் சேர்த்தால் நல்ல ஸ்கோராக இருக்கும்” ரஹானே சொல்கிறார்


இந்தியா-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்: “முதல் இன்னிங்சில் 320 ரன்கள் சேர்த்தால் நல்ல ஸ்கோராக இருக்கும்” ரஹானே சொல்கிறார்
x
தினத்தந்தி 20 Feb 2020 11:58 PM GMT (Updated: 20 Feb 2020 11:58 PM GMT)

வெலிங்டனில் இன்று தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 320 ரன்கள் சேர்த்தாலே அது நல்ல ஸ்கோராக இருக்கும் என்று இந்திய வீரர் ரஹானே கூறியுள்ளார்.

வெலிங்டன்,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பாசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

வெலிங்டன் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 7 டெஸ்டில் விளையாடி அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அதுவும் 52 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த வெற்றியாகும். ஆடுகளத்தில் புற்கள் கணிசமாக உள்ளன. வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழல் நிலவுவதால் பந்து ‘ஸ்விங்’கும் ஆகும். நன்கு எகிறவும் செய்யும். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, புதுமுக வீரர் கைல் ஜாமிசன் ஆகியோரின் தாக்குதலை இந்திய பேட்ஸ்மேன்கள் சாதுர்யமாக சமாளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் விக்கெட் அணிவகுப்பு தான் நடக்கும். மேலும் காற்றின் தாக்கமும் அங்கு அதிகம் இருக்கும். எனவே இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா கூட்டணிக்கு கடும் சோதனை காத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ‘டாஸ்’ வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது.

நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 5-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் அடைந்துள்ளது. 10 போட்டி டிராவில் முடிந்தது. முதலாவது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய துணை கேப்டன் அஜிங்யா ரஹானே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளூர் சீதோஷ்ண நிலை நியூசிலாந்து அணிக்கே சாதகமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் இங்கு எந்த மாதிரி பந்து வீச வேண்டும், எத்தகைய ஷாட்டுகளை அடிக்க வேண்டும் என்பதை அவர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். நியூசிலாந்து மைதானங்கள் மற்ற நாட்டு மைதானங்கள் போல் அல்லாமல் வடிவத்தில் வேறு விதமாக இருக்கும். ஒரு குழுவாக சூழலுக்கு தக்கபடி நாங்கள் விரைவாக மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். முதலில் பேட்டிங் செய்யும் போது, எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் விளையாட வேண்டும். இந்தியாவுக்கு வெளியே ஆடும் போது, முதல் இன்னிங்சில் 320, 330 ரன்கள் எடுத்தாலே அது இந்தியாவுக்கு நல்ல ஸ்கோராக இருக்கும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வெற்றி பெற்ற டெஸ்டுகளை பார்த்தால், முதல்இன்னங்சில் 320 முதல் 350 ரன்கள் வரை எடுத்திருப்பது தெரியும்.

320 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர் இல்லாவிட்டாலும் அதை வைத்து கொண்டு உலகத்தரம் வாய்ந்த நமது பந்து வீச்சாளர்களை கொண்டு எதிரணியை சுருட்ட முடியும். எந்த சூழலிலும் விக்கெட் வீழ்த்தக்கூடிய திறமை நமது பவுலர்களுக்கு உண்டு.

பொதுவாக நியூசிலாந்து ஆடுகளங்கள் 2 நாட்களுக்கு பிறகு பேட்டிங்குக்கு உகந்ததாக மாறி விடும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இருவரும் விக்கெட் வீழ்த்தும் திறமை படைத்தவர்கள். இவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், நன்றாக செயல்படுவார்கள். இவ்வாறு ரஹானே கூறி னார்.

Next Story