கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல் + "||" + First Test against New Zealand: India lose 5 wickets

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
வெலிங்டன்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் விருத்திமான் சஹாவுக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் சேர்க்கப்பட்டார். பிரதான சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் இடம் பிடித்ததால் ரவீந்திர ஜடேஜா வெளியே உட்கார வைக்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் அறிமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் வாய்ப்பு பெற்றார். மேகமூட்டமான சீதோஷ்ண நிலை நிலவியதால் ‘டாஸ்’ ஜெயித்ததும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.


வானிலை, புற்களுடன் கூடிய ஆடுகளம், குளிர்ச்சியான காற்று இப்படி வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழலுக்கு மத்தியில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், பிரித்வி ஷாவும் களம் இறங்கினர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சுடன் கூடிய தாக்குதலை தொடுத்து இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். டிம் சவுதியின் பவுலிங்கில் பிரித்வி ஷா (16 ரன்) கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த புஜாரா தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினாலும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட நியூசிலாந்தின் உயரமான வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜாமிசனின் பந்து வீச்சில் புஜாரா (11 ரன், 42 பந்து) விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் ஆனார். 3-வது விக்கெட்டுக்கு நுழைந்த கேப்டன் விராட் கோலிக்கும் (2 ரன், 7 பந்து) அவரே ‘செக்’ வைத்தார். ஆப்-சைடுக்கு சற்று வெளியே சென்ற பந்தை கோலி ‘கவர்’ பகுதியில் அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து பேட்டின் விளிம்பில் உரசிக்கொண்டு ஸ்லிப்பில் நின்ற ராஸ் டெய்லரிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. சமீப காலமாக கோலி ஆப்-ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில் அடிக்கடி விக்கெட்டை தாரை வார்க்கிறார். இந்த முறையும் அதே யுக்திக்கு கோலி இரையானார்.

இதன் பின்னர் துணை கேப்டன் அஜிங்யா ரஹானேவுடன், மயங்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். மேற்கொண்டு ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்த இந்த ஜோடியை டிரென்ட் பவுல்ட் பிரித்தார். ஸ்கோர் 88 ரன்களை எட்டிய போது அகர்வால் 34 ரன்களில் (84 பந்து, 5 பவுண்டரி) ஷாட் பிட்ச் பந்தை அடித்த போது கேட்ச் ஆகிப்போனார். ஹனுமா விஹாரியும் (7 ரன்) சோபிக்கவில்லை. ரஹானே மட்டும் திருப்திகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய அணி தேனீர் இடைவேளையின் போது முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரஹானே 38 ரன்களுடனும் (122 பந்து, 4 பவுண்டரி), ரிஷாப் பண்ட் 10 ரன்னுடனும் (37 பந்து) களத்தில் இருந்தனர். அதன் பிறகு மழை கொட்டியதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் இந்திய வீரர் மயங்க் அகர்வால் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒரு பேட்ஸ்மேனாக இது போன்ற ஆடுகளங்களில் அதுவும் முதல் நாளில் ஆடுவது எளிதானது அல்ல. அவர்கள் சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்து தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக ஜாமிசனின் பந்து வீச்சு உண்மையிலேயே மிகவும் அபாரமாக இருந்தது’ என்று குறிப்பிட்டார்.

ராஸ் டெய்லர் சாதனை

நியூசிலாந்து மூத்த வீரர் ராஸ் டெய்லருக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த மைல்கல்லை எட்டிய 4-வது நியூசிலாந்து வீரர் ஆவார். அதே சமயம் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டி ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளில் கால்பதித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். 35 வயதான டெய்லர் ஏற்கனவே 231 ஒரு நாள் போட்டிகளிலும், 100 இருபது ஓவர் ஆட்டங்களிலும் பங்கேற்று இருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம் - ரஷிய துணை பிரதமர்
கொரோனாவுக்கு எதிரான 47 தடுப்பூசிகளை உருவாக்கி வருவதாக ரஷிய துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
2. கொரோனா வைரசுக்கு எதிரான கண்ணுக்கு தெரியாத யுத்தம் - ராஜ் நாத் சிங்
கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் நம் வாழ்நாளில் கண்ணுக்கு தெரியாத யுத்தம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
3. நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு - பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்
நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
4. நியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
நியூசிலாந்தில் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டதால், நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் பாதியிலேயே தாயகம் திரும்பினர்.