ஐ.பி.எல். உதயமான நாள் இன்று - “கபில்தேவ் விதைத்தார், லலித்மோடி விருட்சமாக்கினார்”


ஐ.பி.எல். உதயமான நாள் இன்று - “கபில்தேவ் விதைத்தார், லலித்மோடி விருட்சமாக்கினார்”
x
தினத்தந்தி 18 April 2020 12:42 AM GMT (Updated: 18 April 2020 12:42 AM GMT)

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? நடக்காதா? என்பதற்கு இப்போதைக்கு விடை இல்லை. கொரோனா அரக்கனை முழுமையாக கட்டுப்படுத்தினால் மட்டுமே ஐ.பி.எல். நடப்பதற்கான சாத்தியக்கூறு தென்படும்.

மும்பை, 

ஐ.பி.எல். போட்டியை எப்படியாவது நடத்த வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தீவிர முனைப்பு காட்டுவதற்கு ஒரே காரணம், அந்த அளவுக்கு இந்த போட்டியில் பணமழை கொட்டுகிறது. ஒளிபரப்பு உரிமம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் ஒரு சீசனில் ஏறத்தாழ ரூ.4 ஆயிரம் கோடி வரை பி.சி.சி.ஐ. வருமானம் பார்த்து விடுகிறது. 

இதில் வீரர்களுக்கும் பெரிய அளவில் ஜாக்பாட் அடிக்கிறது. உள்ளூரில் சாதாரணமாக ஆடிக்கொண்டிருக்கும் முதல் தர வீரர்கள் கூட ஒரே சீசனில் கோடீஸ்வரர்களாக ஆகி விடுவது உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது.

12 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் (ஏப்ரல் 18) தான் ஐ.பி.எல். உதயமானது. இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் எப்படி உருவானது தெரியுமா? ஒரு குட்டி பிளாஷ்பேக்....

முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் தலைமையில், இந்தியன் கிரிக்கெட் லீக் அதாவது ஐ.சி.எல். என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2007-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. ஆனால் தங்களுக்கு எதிரான செயல் என்று கண்டித்த இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த போட்டிக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் அங்கீகாரம் அளிக்கவில்லை. 

இந்த போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பி.சி.சி.ஐ. தடை விதித்தது. பிறகு, நாம் ஏன் இதே போல் போட்டி நடத்தக்கூடாது என்ற பி.சி.சி.ஐ.யின் சிந்தனையில் உதித்தது தான் இந்த ஐ.பி.எல். இதற்கு செயல் வடிவம் கொடுத்தவர், அப்போது பி.சி.சி.ஐ. துணைத்தலைவராக இருந்த லலித்மோடி. அவரே ஐ.பி.எல்.லின் முதல் தலைவராகவும் ஆனார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஐ.சி.எல். என்ற கபில்தேவ் விதைத்த வித்து தான் இன்று ஐ.பி.எல். ஆக விருட்சம் அடைந்திருக்கிறது என்றால் மிகையல்ல.

அதே பாணியில் 8 நகரங்களை அடிப்படையாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டு, இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏலம் மூலம் அணிகளுக்கு ஒதுக்கப்பட்டனர். அதுவரை சர்வதேச களத்தில் பாம்பும், கீரியுமாக முட்டிமோதிக் கொண்ட வீரர்கள் ஒரே அணிகளில் கைகோர்த்து நின்றதை பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது. புதுவிதமான மினுமினுப்பான உடைகளில் வீரர்கள் உற்சாகமாக வலம் வந்தனர்.

திரிலிங்கான ஆட்டங்கள், சரவெடியான பேட்டிங், சியர்-லீடர்ஸ் எனப்படும் நடன அழகிகளின் நடனம் என்று ரசிகர்களை குதூகலமடையச் செய்தது. இந்த போட்டிக்கு கிடைத்த வரவேற்பை கண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கொச்சி டஸ்கர்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் ஒப்பந்தத்தை மீறியதால் பாதியிலேயே கழற்றி விடப்பட்டன. 

அதேசமயம் டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஒப்பந்த விதிகளை மீறியதால் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி இணைந்தது. சூதாட்ட பிரச்சினையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டு தடைக்கு பிறகு திரும்பின. முதலாவது ஐ.பி.எல்.க்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் முழுமையாக ஓரங்கட்டப்பட்டனர். மற்றபடி அதே மிடுக்குடன் ஐ.பி.எல் கிரிக்கெட் பயணம் தொடருகிறது.

2008-ம் ஆண்டு ஏப்ரல் 18-ந்தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறிய தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பந்தாடியது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பிரன்டன் மெக்கல்லம் 73 பந்துகளில் 10 பவுண்டரி, 13 சிக்சருடன் 158 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார். ஐ.பி.எல்.ல் முதல் சதத்தை பதிவு செய்த வீரர் என்ற பெருமைக்குரிய மெக்கல்லம் இப்போது அதே அணியின் பயிற்சியாளராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Next Story