ஐபிஎல்: பெங்களூரு- கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை


ஐபிஎல்:  பெங்களூரு- கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 20 Oct 2020 8:37 PM GMT (Updated: 20 Oct 2020 8:37 PM GMT)

இவ்விரு அணிகள் இடையே ஏற்கனவே நடந்த லீக்கில் கொல்கத்தா அணி 82 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

அபுதாபி,

பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் நல்ல நிலையில் உள்ளது. டாப்-4 பேட்ஸ்மேன்கள் ஆரோன் பிஞ்ச், தேத்தத் படிக்கல், கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் கலக்கி வருகிறார்கள். இவர்கள் 4 பேரும் கூட்டாக 10 அரைசதம் அடித்திருக்கிறார்கள். முந்தைய ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சரிவில் தவித்த போது டிவில்லியர்ஸ் 22 பந்தில் 55 ரன்கள் நொறுக்கி வெற்றிக்கு வித்திட்டார். இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே சமயம் 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 4 தோல்வி) உள்ள கொல்கத்தா அணி கடந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை தோற்கடித்த உற்சாகத்துடன் களம் காணுகிறது. மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் பந்துவீச்சு சர்ச்சையில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதும், களம் கண்ட முதல் ஆட்டத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசனின் வருகையும் அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கும். ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் (9 ஆட்டத்தில் 92 ரன்) இதுவரை தனது புயல்வேக அதிரடியை காட்டவில்லை. 

அவரும் அசத்தினால் கொல்கத்தா அணி பேட்டிங்கில் இன்னும் வலுவடையும். இவ்விரு அணிகள் இடையே ஏற்கனவே நடந்த லீக்கில் கொல்கத்தா அணி 82 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதற்கு பழிதீர்க்க கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Next Story