கிரிக்கெட்

பகல்-இரவு போட்டியாக நடக்கிறது: இந்தியா- ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடக்கம் + "||" + Day-night competition is going on India-Australia First Test Start today in Adelaide

பகல்-இரவு போட்டியாக நடக்கிறது: இந்தியா- ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடக்கம்

பகல்-இரவு போட்டியாக நடக்கிறது: இந்தியா- ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடக்கம்
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
அடிலெய்டு, 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சுடச்சுட பதிலடி கொடுத்தது.

அடுத்ததாக பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக அடிலெய்டில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்தில் நடக்கும் இந்த டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர்கள் சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

முதலாவது டெஸ்டுக்கான ஆடும் லெவன் அணியை இந்திய அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. 11 பேரும் வலதுகை ஆட்டக்காரர்களாக இடம்பெற்றிருப்பது ஆச்சரியமான உண்மையாகும். பகல்-இரவு பயிற்சி கிரிக்கெட்டில் 73 பந்துகளில் சதம் விளாசிய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் மற்றும் அரைசதம் அடித்த சுப்மான் கில் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் இடத்தை மயங்க் அகர்வால், பிரித்வி ஷா ஜோடி தக்க வைத்துள்ளது. விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹாவும், ஒரே சுழற்பந்து வீச்சாளராக அஸ்வினும் களம் இறங்குகிறார்கள்.

இந்திய கேப்டன் விராட் கோலி இந்த டெஸ்டுடன் மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் தாயகம் திரும்புகிறார். அதன் பிறகு எஞ்சிய 3 டெஸ்டிலும் அவர் விளையாடமாட்டார். எனவே இந்த டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக தொடங்குவதில் அவர் வரிந்து கட்டுவார். கோலி, புஜாரா ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் தான் 2018-19-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சரித்திரம் படைத்தது. அதே போல் சாதிக்க வேண்டும் என்றால் இவர்கள் இருவரும் நிலைத்து நின்று அசத்த வேண்டும்.

பிங்க் பந்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும். நன்கு பவுன்சும் ஆகும். எனவே ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய வேக சூறாவளிகள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது முக்கியமாகும்.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்ற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தொடரில் டெஸ்ட் வெற்றிக்கு 30 புள்ளியும், டிராவுக்கு 10 புள்ளியும் வழங்கப்படும். புள்ளி பட்டியலில் நியூசிலாந்து வேகமாக முன்னேறி வருவதால் இந்திய அணி டாப்-2 இடத்திற்குள் நீடிக்க வேண்டும் என்றால் இந்த தொடரில் குறைந்தது ஒரு வெற்றி அல்லது 3 டிராவது பெற வேண்டியது அவசியமாகும்.

இந்த தொடரில் 4 டெஸ்டிலும் தோற்று அடுத்து சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்டிலும் ஜெயித்தாலும் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியால் முன்னேற முடியாமல் போய்விடக்கூடிய சிக்கல் உருவாக வாய்ப்பு உண்டு. எனவே ஆஸ்திரேலிய தொடரில் முத்திரை பதிக்க வேண்டியது அவசியமாகும்.

ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக டேவிட் வார்னர் முதலாவது டெஸ்டில் ஆடவில்லை. பயிற்சி ஆட்டத்தில் ஜோ பர்ன்ஸ் சொதப்பிய போதிலும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதே போல் வளரும் நட்சத்திரமான ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் அறிமுக வீரராக அடியெடுத்து வைக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியின் தூணாக ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித்தும், மார்னஸ் லபுஸ்சேனும் விளங்குகிறார்கள். களத்தில் இவர்களின் ஸ்திரத்தன்மையை பொறுத்தே ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் அமையும். சூழ்நிலைக்கு தக்கபடி சாதுர்யமாக ஆடும் திறன் படைத்த இவர்கள் இந்திய பவுலர்களுக்கு நிச்சயம் சோதனையாக இருப்பார்கள். சுமித்துக்கு லேசான முதுகுவலி பிரச்சினை இருந்தாலும் அவர் இந்த டெஸ்டில் ஆடுவது உறுதி என்று அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் இன்னொரு பலம் பந்து வீச்சு. வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசில்வுட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோர் உள்ளூர் சூழலில் அச்சுறுத்தக்கூடியவர்கள். அதுவும் பிங்க் பந்தில் ஷாட்பிட்ச் தாக்குதலை அதிகமாக தொடுப்பார்கள். இதை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்ற ஆர்வம் இப்போதே தொற்றிக்கொண்டு விட்டது. முன்னணி இரு அணிகள் மல்லுகட்டுவதால் களத்தில் ஆக்ரோஷத்துக்கும், பரபரப்புக்கும் துளியும் குறைவிருக்காது.

போட்டி நடக்கும் அடிலெய்டில் இந்திய அணி இதுவரை 12 டெஸ்டுகளில் விளையாடி 2-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. 3 ஆட்டம் டிராவில் முடிந்தது. விராட் கோலி இங்கு 3 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி இங்கு 78 டெஸ்டுகளில் விளையாடி 41-ல் வெற்றியும், 18-ல் தோல்வியும், 19-ல் டிராவும் கண்டுள்ளது. 1948-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 674 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒருஅணியின் அதிகபட்சமாகும்.

காலை 9.30 மணிக்கு... 

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா, அஸ்வின், பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலியா: ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெய்ன் (கேப்டன்), கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன்.

இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

ஆஸ்திரேலியாவின் ‘பிங்க் கோட்டையை’ தகர்க்குமா இந்தியா?

பகல்-இரவு டெஸ்டில் (பிங்க் பந்து டெஸ்ட்) ஆஸ்திரேலியா அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறது. இதுவரை 14 பகல்-இரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில் 7-ல் ஆடியுள்ள ஆஸ்திரேலிய அணி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது. இதில் அடிலெய்டு மைதானத்தில் 4 முறை வென்றதும் அடங்கும். மீண்டும் ‘பிங்க்’ பந்து டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் உள்ள ஆஸ்திரேலியாவின் கோட்டையை இந்திய அணி தகர்க்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

இந்திய அணியை எடுத்துக் கொண்டால் பிங்க் பந்து டெஸ்டில் இதுவரை ஒன்றில் மட்டுமே விளையாடியுள்ளது. கடந்த ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இத்தகைய டெஸ்டில் இந்திய அணி, வங்காளதேசத்தை 3-வது நாளிலேயே ஊதித்தள்ளியது.

சாதனை துளிகள்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 98 டெஸ்டுகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 42-ல் ஆஸ்திரேலியாவும், 28-ல் இந்தியாவும் வெற்றி பெற்றன. 27 போட்டி ‘டிரா’ ஆனது. மற்றொரு டெஸ்ட் டையில் (சமன்) முடிந்தது. இவற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 48 டெஸ்டில் பங்கேற்று அதில் 7-ல் வெற்றியும், 29-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. எஞ்சிய 12 போட்டிகள் ‘டிரா’ ஆனது. இவ்விரு அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து சில புள்ளி விவரங்கள் வருமாறு:-

அணி அதிகபட்சம்: இந்தியா: 705-7 டிக்ளேர் (சிட்னி, 2004-ம் ஆண்டு), ஆஸ்திரேலியா: 674 (அடிலெய்டு, 1948)

அணி குறைந்தபட்சம்: இந்தியா 58 ரன் (பிரிஸ்பேன், 1947), ஆஸ்திரேலியா-83 ரன் (மெல்போர்ன், 1981)

அதிக ரன்கள் குவித்தவர்: சச்சின் தெண்டுல்கர் (இந்தியா)- 3,630 ரன் (39 டெஸ்ட்), ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா)- 2,555 ரன் (29).

தனிநபர் அதிகபட்சம்: மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா)-329 ரன் (சிட்னி, 2012), வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா)- 281 ரன் (கொல்கத்தா, 2001)

அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்: கும்பிளே (இந்தியா)-111 விக்கெட் (20), நாதன் லயன் (ஆஸ்திரேலியா)-85 விக்கெட் (18).

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 17 கோடியை தாண்டியது
இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 16.94 கோடியாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. கொரோனா பரவல்: இந்தியாவில் 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
3. இந்தியாவிற்கு 25 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகளை அனுப்பி வைத்தது கனடா
கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவிற்கு கனடா அரசு சார்பாக 25 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
4. கொரோனா சூழலில் இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன் - போப் ஆண்டவர்
கொரோனா சூழலில் இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறி உள்ளார்.
5. இந்தியாவின் கொரோனா சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணி; யுனிசெப் அமைப்பு கருத்து
இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள சோகம், உலகத்துக்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும் என்று ஐ.நா.வின் துணை அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.