ஆஸ்திரேலியா உடனான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் ரோகித் சர்மா துணைக் கேப்டனாக நியமனம்


ஆஸ்திரேலியா உடனான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் ரோகித் சர்மா துணைக் கேப்டனாக நியமனம்
x
தினத்தந்தி 1 Jan 2021 6:01 PM GMT (Updated: 1 Jan 2021 6:01 PM GMT)

சிட்னி, பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

சிட்னி, 

ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் வெறும் 36 ரன்னில் சுருண்டு படுதோல்வியை தழுவியது. மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் எழுச்சி கண்ட இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டுவந்துள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 7-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி, அடிலெய்டு டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்தியா திரும்பியதால், 2வது டெஸ்ட் போட்டியில் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அப்போது புஜாரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் காயத்தில் இருந்தும் மீண்ட ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா சென்று கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்ததால் கடைசி இரண்டு போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து புஜாராவுக்குப் பதிலாக ரோகித் சர்மா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரஹானே (கேப்டன்),  2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), 3. மயங்க் அகர்வால், 4. பிரித்வி ஷா,  5. கேஎல் ராகுல், 6. புஜாரா, 7. ஹனுமா விஹாரி, 8. ஷுப்மான் கில், 9. விருத்திமான் சாஹா, 10. ரிஷப்  பண்ட், 11. ஜஸ்பிரித் பும்ரா, 12. நவ்தீப் சைனி, 13. குல்தீப் யாதவ், 14. ரவீந்திர ஜடேஜா, 15. ஆர். அஸ்வின், 16. முகமது சிராஜ், 17. ஷர்துல் தாகூர், 18. டி நடராஜன்.

Next Story