கிரிக்கெட்

முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: கால்இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-இமாச்சல பிரதேசம் இன்று மோதல் + "||" + Mushtaq Ali 20 over cricket: Tamil Nadu-Himachal Pradesh clash in the quarterfinals today

முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: கால்இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-இமாச்சல பிரதேசம் இன்று மோதல்

முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: கால்இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-இமாச்சல பிரதேசம் இன்று மோதல்
சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-இமாச்சல பிரதேசம் அணிகள் மோதுகின்றன.
20 ஓவர் கிரிக்கெட்
12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, வதோதரா, இந்தூர் ஆகிய 6 நகரங்களில் நடந்தது. இதில் கலந்து கொண்ட 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் ஆட்டங்கள் முடிவில் நடப்பு சாம்பியன் கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், அரியானா, பரோடா, ராஜஸ்தான், பீகார் ஆகிய அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின.

கால்இறுதி ஆட்டங்கள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அரைஇறுதிப்போட்டி 29-ந் தேதியும், இறுதிப்போட்டி 31-ந் தேதியும் நடைபெறுகிறது.

கர்நாடகா பதிலடி கொடுக்குமா?
இன்று பகல் 12 மணிக்கு நடைபெறும் முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கர்நாடகா, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றியை சுவைத்த மன்தீப் சிங் தலைமையிலான பஞ்சாப் அணி ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்தும், கருண் நாயர் தலைமையிலான கர்நாடக அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் அதே பிரிவில் 2-வது இடத்தை பெற்றும் கால்இறுதிக்கு முன்னேறின.

லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகாவை சாய்த்து இருந்தது. அதற்கு இந்த ஆட்டத்தில் பதிலடி கொடுக்க கர்நாடக அணி தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

தமிழ்நாடு-இமாச்சல பிரதேசம்
2-வது கால்இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, ரிஷி தவான் தலைமையிலான இமாச்சல பிரதேச அணியை சந்திக்கிறது. தமிழக அணி 5 லீக் ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடி ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது. ‘சி’ பிரிவில் இடம் பிடித்து இருந்த இமாச்சல பிரதேச அணி 4 ஆட்டங்களில் வெற்றியும், ஒரு ஆட்டத்தில் தோல்வியும் கண்டு தனது பிரிவில் 2-வது இடம் பெற்று கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

தமிழக அணியில் அதிக ரன் குவித்த என். ஜெகதீசன் (5 ஆட்டங்களில் 315 ரன்கள்), தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்களும், விஜய் சங்கர், பாபா அபராஜித் உள்பட நல்ல ஆல்-ரவுண்டர்களும், முருகன் அஸ்வின் (9 விக்கெட்), சாய் கிஷோர் உள்ளிட்ட சிறந்த பவுலர்களும் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் சிறந்து விளங்கும் இமாச்சல பிரதேச அணிக்கு, வலுவான தமிழக அணியின் சவாலை சமாளிப்பது எளிதான காரியமாக இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: அசாமை பந்தாடியது தமிழக அணி
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசாமை பந்தாடியது.