ஐ.பி.எல். ஆட்டங்களை 6 நகரங்களில் நடத்த முயற்சி: பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்ப்பு


ஐ.பி.எல். ஆட்டங்களை 6 நகரங்களில் நடத்த முயற்சி: பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்ப்பு
x
தினத்தந்தி 2 March 2021 12:56 AM GMT (Updated: 2 March 2021 12:56 AM GMT)

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.

மும்பை, 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. மும்பையில் 4 ஸ்டேடியங்கள் இருப்பதால் அனைத்து ஆட்டங்களையும் அங்கு நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மும்பையில் மட்டும் போட்டியை நடத்துவது சாத்தியமானதாக இருக்காது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சிந்திக்க தொடங்கி உள்ளது. இதனால் மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, டெல்லி, ஆமதாபாத் ஆகிய 6 நகரங்களில் போட்டியை நடத்தலாமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.பி.எல். நிர்வாக குழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாவிட்டாலும், 6 நகரங்களில் நடத்த முயற்சி எடுத்து வருவதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் ‘தங்கள் அணியின் உள்ளூர் ஆட்டங்களை சொந்த மைதானத்தில் ஆட முடியாமல் போனால் அது அணியின் முன்னேற்றத்தையும், வருவாயையும் வெகுவாக பாதிக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளும் தங்களது எதிர்ப்பு குரலை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெறும் இடங்களில் ஐதராபாத்தும் இடம் பெற வேண்டும் என்று தெலுங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமராவ், இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.பி.எல். நிர்வாகிகளுக்கு ‘டுவிட்டர்’ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக தங்கள் மாநில அரசு எடுத்து இருக்கும் தீவிர நடவடிக்கையால் ஐதராபாத்தில் பாதிப்பு அளவு மிகவும் குறைவாக இருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் அவர் இங்கு போட்டியை நடத்த அரசு முழு ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சர் கே.டி.ராமராவின் அப்பீலுக்கு முழு ஆதரவு அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவருமான அசாருதீன் கருத்து தெரிவித்துள்ளார். 

Next Story