ஐபிஎல்: அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா கொல்கத்தா?


ஐபிஎல்: அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா கொல்கத்தா?
x
தினத்தந்தி 17 May 2022 11:14 PM GMT (Updated: 17 May 2022 11:14 PM GMT)

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா போராட்டமாகும்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிக்க முடியும். நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அந்த அணி தனது முந்தைய 2 லீக் ஆட்டங்களில் முறையே மும்பை, ஐதராபாத் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி நல்ல உத்வேகத்துடன் உள்ளது. கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (351 ரன்கள்), நிதிஷ் ராணாவும், பந்து வீச்சில் உமேஷ் யாதவ், டிம் சவுதி, சுனில் நரின், வருண் சக்ரவர்த்தியும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்கி வருகிறார். வெங்கடேஷ் அய்யர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் பேட்டிங்கில் எதிர்பார்த்தபடி சோபிக்கவில்லை. அவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டால் அந்த அணி மேலும் வலுப்பெறும்.

அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 13 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருப்பதுடன், ஏறக்குறைய அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டது. ரன்-ரேட்டில் நல்ல நிலையில் இருக்கும் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் மோசமான தோல்வியை சந்திக்காமல் இருந்தாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விட முடியும். அந்த அணி தனது முந்தைய லீக் ஆட்டங்களில் குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது. அந்த இரண்டு ஆட்டங்களிலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்தது பாதகமாக அமைந்தது. லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (469 ரன்கள்), தீபக் ஹூடா, குயின்டாக் டி காக்கும், பந்து வீச்சில் அவேஷ் கான், ஜாசன் ஹோல்டர், ரவி பிஷ்னோய், மொசின் கான், சமீராவும் வலுசேர்க்கிறார்கள். ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை அளித்து வருகிறார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் லக்னோ அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆதிக்கத்தை தொடருவதுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேற லக்னோ அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முந்தைய லீக்கில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர கொல்கத்தா அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story