2-வது ஒருநாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி


2-வது ஒருநாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி
x

முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

கெபேஹா,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில் அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கெபேஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

முதலாவது ஆட்டத்தில் 116 ரன்னில் தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய இந்தியா அந்த இலக்கை 16.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. பந்து வீச்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் (5 விக்கெட்), அவேஷ் கான் (4 விக்கெட்) மிரட்டினார்கள். பேட்டிங்கில் அறிமுக வீரர் சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து அசத்தினர்.

தென்ஆப்பிரிக்க அணியில் பேட்ஸ்மேன்கள் கடந்த ஆட்டத்தில் மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். ஆடுகளத் தன்மையை சரியாக கணிக்க தவறியதே தோல்விக்கு காரணம் என்பதை கேப்டன் மார்க்ரம் ஒப்புக் கொண்டார். இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வரிந்து கட்டும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டுவதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இந்த ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் அதிக ஸ்கோரை எதிர்பார்க்க முடியாது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சரிசமமாக கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், ரஜத் படிதார், திலக் வர்மா, லோகேஷ் ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

தென் ஆப்பிரிக்கா: ரீஜா ஹென்ரிக்ஸ், டோனி டி ஜோர்ஜி, வான்டெர் டஸன், மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், பெலுக்வாயோ, வியான் முல்டெர், நன்ரே பர்கர், கேஷவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி.


Next Story