தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி பதிலடி கொடுக்குமா?


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி பதிலடி கொடுக்குமா?
x

ராஞ்சியில் இன்று நடைபெறும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி களம் காணுகிறது.

ராஞ்சி,

இந்தியா வந்துள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். ஏனெனில் இதில் தோற்றால் இந்தியா தொடரை இழந்து விடும். நெருக்கடிக்கு மத்தியில் களம் இறங்கும் இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வியூகத்துடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

முந்தைய ஆட்டத்தில் 250 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 240 ரன்னுக்குள் அடங்கியது. பேட்டிங்கில் தொடக்க வரிசை வீரர்கள் கேப்டன் ஷிகர் தவான், சும்பான் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகியோர் சோபிக்கவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் (50 ரன்கள்), சஞ்சு சாம்சன் (ஆட்டம் இழக்காமல் 86 ரன்கள்) மட்டுமே நிலைத்து நின்று ஆடினர். ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தினார். வேகப்பந்து வீச்சாளர்கள் அவேஷ் கான், முகமது சிராஜ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தாததுடன் ரன்களை வாரி வழங்கினர். சுழற்பந்து வீச்சாளர்கள் ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். அணியின் பீல்டிங்கும் மெச்சத்தகுந்ததாக இல்லை.

தீபக் சாஹர் விலகல்

காயம் காரணமாக முதலாவது ஆட்டத்தில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் முதுகுவலி பிரச்சினை காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து நேற்று விலகினார். இது இந்திய அணிக்கு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான். 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியில் மாற்று வீரராக இடம் பெற்று இருக்கும் தீபக் சாஹர் அதற்கு முன்னதாக முழு உடல் தகுதியை எட்டுவாரா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. கடந்த போட்டியில் சிறப்பாக செயல்படாத வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், அவேஷ் கான் ஆகியோரில் ஒருவரை தூக்கி விட்டு பெங்காலை சேர்ந்த புதுமுக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாரை களம் இறக்கப்பட வாய்ப்புள்ளது. வலுவான தென்ஆப்பிரிக்காவை வீழ்த்த வேண்டுமானால் இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என எல்லாவற்றிலும் ஒருசேர ஜொலிக்க வேண்டியது அவசியமானதாகும்.

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் குயின்டான் டி காக், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் சிறப்பான நிலையில் இருக்கின்றனர். கேப்டன் பவுமாவின் பேட்டிங் மட்டும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. அவர் இந்தியாவுக்கு எதிரான கடந்த 4 ஆட்டங்களில் 0, 0, 3 (20 ஓவர் போட்டி), 8 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அவர் பழைய பார்முக்கு திரும்ப வேண்டியது அந்த அணிக்கு முக்கியமானதாகும். பந்து வீச்சில் ரபடா, வெய்ன் பார்னெல், கேஷவ் மகராஜ், இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.

விறுவிறுப்பு

தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

ராஞ்சி மைதானத்தில் இதுவரை 5 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்து இருக்கின்றன. இதில் முதல் 3 ஆட்டங்களில் 2-ல் இந்தியா வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. கடைசி 2 ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

பிற்பகல் 1.30 மணிக்கு...

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ்.

தென்ஆப்பிரிக்கா: ஜேன்மன் மலான், குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேஷவ் மகராஜ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி, இங்கிடி.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story