கிரேஸ் ஹாரிஸ் அதிரடி: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உ.பி. அணி திரில் வெற்றி..!!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணி வெற்றிபெற்றது.
மும்பை,
பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி நேற்று தொடங்கியது. இந்நிலையில், பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் 3வது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதின.
இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கடந்த ஆட்டத்தில் காயமடைந்த குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி ஆடவில்லை. சினே ராணா குஜராத் அணியை வழிநடத்தினார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சப்பினேனி மேகனா, சோபியா டங்க்லி ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் சப்பினேனி மேகனா 24 ரன்னிலும், சோபியா டங்க்லி 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஹர்லீன் தியோல் களம் புகுந்தார். ஆனால் மறுமுனையில் களம் இறங்கிய அன்னாபெல் சதர்லேண்ட் 8 ரன்னிலும், சுஷ்மா வர்மா 9 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஹர்லீன் தியோலுடன், ஆஷ்லே கார்ட்னர் ஜோடி சேர்ந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்லே கார்ட்னர் 25 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து தயாளன் ஹேமலதா களம் இறங்கினார்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஹர்லீன் தியோல் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்து அசத்தினார். நிலைத்து நின்று ஆடி அணிக்கு பெரிய ஸ்கோர் ஏற்படுத்து தருவார் என நினைத்திருந்த வேளையில் தியோல் 46 ரன்னுக்கு அவுட் ஆனார். இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் ஹர்லீன் தியோல் 46 ரன், ஆஷ்லே கார்ட்னர் 25 ரன் எடுத்தனர். உ.பி. வாரியர்ஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா மற்றும் சோபி எக்லெஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உபி வாரியர்ஸ் அணியின் சார்பில் கேப்டன் அலிசா ஹீலி மற்றும் ஷெராவத் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் ஹீலி 7 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து ஷெராவத் 5 ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீராங்கனைகளும் சோபிக்கத் தவறினர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிரண் நவ்கிரே தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 53 (43) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கின வீராங்கனைகளும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தநிலையில் கிரேஸ் ஹாரிசுடன், சோபி எக்லெஸ்டன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன்களை குவித்து, எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என எண்ணி இருந்த குஜராத் அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இந்த ஜோடியில் ஹாரிஸ், குஜராத் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 23 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.
முடிவில் கிரேஸ் ஹாரிஸ் 59 (26) ரன்களும், சோபி எக்லெஸ்டன் 22 (12) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் உபி வாரியர்ஸ் அணி 19.5 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக கிம் கார்த் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்ஸ் அணி, தனது லீக் ஆட்டத்தின் முதல் வெற்றியை பதிவு செய்தது.