"எம்.எஸ். தோனியால்தான் அவர் ரோகித் சர்மாவாக உள்ளார்"- கவுதம் கம்பீர்


எம்.எஸ். தோனியால்தான் அவர் ரோகித் சர்மாவாக உள்ளார்- கவுதம் கம்பீர்
x
தினத்தந்தி 14 Sep 2023 7:29 AM GMT (Updated: 14 Sep 2023 9:42 AM GMT)

ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கையை துவம்சம் செய்த இந்தியா 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ரோகித் 53 ரன்கள் எடுத்தார். முன்னதாக ரோகித் 23 ரன்கள் எடுத்திருந்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி ரொம்பவே தடுமாறிக் கொண்டிருந்த ரோகித்தை அவரின் திறமையை உணர்ந்த அப்போதைய கேப்டன் எம்.எஸ். தோனி 2013ல் துவக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தார்.

இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த வளர்ச்சிக்கு தோனி தான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

"10 ஆயிரம் ரன்களை அடிப்பது அவருக்கு எளிதாக இருந்திருக்காது. ஏனெனில் கிரிக்கெட்டில் அவர் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். அதைப் பார்த்த காரணத்தாலேயே இளம் வீரர்களுக்கு கடினமான நேரங்களில் ரோகித் சர்மா கேப்டனாக ஆதரவு கொடுத்து இருக்கிறார்.

மேலும் 'ரோகித் சர்மா இன்று ரோகித் சர்மாவாக இருக்கிறார் என்றால் அதற்கு எம்.எஸ். தோனி மட்டுமே காரணமாவார். ஏனெனில் ஆரம்ப காலகட்டங்களில் தடுமாறிய போது தோனி அவருக்கு தொடர்ந்து ஆதரவுகளையும் வாய்ப்புகளையும் கொடுத்தார். அதை இறுக்கமாக பிடித்த ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், தனிநபர் அதிகபட்ச ரன்கள் (264), 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் என ஏராளமான உலக சாதனைகள் படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் எம்.எஸ். தோனி மட்டும் ஆரம்ப காலங்களில் தொடர் வாய்ப்புகளை கொடுக்காமல் போயிருந்தால் ரோகித் சர்மா இன்று இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியாது'' என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story