புஜாரா இடத்தில் இவர் ஆட வேண்டும்: வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இந்திய முன்னாள் வீரர்...!


புஜாரா இடத்தில் இவர் ஆட வேண்டும்: வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த இந்திய முன்னாள் வீரர்...!
x

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நாளை தொடங்குகிறது.

மும்பை,

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியில் புஜாராவின் இடத்தில் யாரை களம் இறக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புஜாராவின் இடத்தில் ஜெய்ஸ்வாலை களம் இறக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை தெரிவித்ததோடு முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனையும் அவர் தேர்வு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது,

என்னைப் பொறுத்த வரை ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாகவும் ஜெய்ஸ்வால் 3வது இடத்திலும் விளையாட வேண்டும். இங்கே நிறைய பேர் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராகவும் கில் மிடில் ஆர்டரிலும் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள்.

ஆனால் கில் தமக்கான இடத்தை உருவாக்கியுள்ளார். எனவே அதை மற்ற யாராலும் தொட முடியாது. அதனால் 3வது இடத்தில் நான் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்தேன். சிறந்த வீரரான அவர் இந்த போட்டியில் அறிமுகமாகி நிறைய ரன்கள் அடிப்பார் என்று நம்புகிறேன். அவர்களைத் தொடர்ந்து 4வது இடத்தில் விராட் கோலி 5வது இடத்தில் ரகானே ஆகியோர் விளையாடுவார்கள். அதைத்தொடர்ந்து 6வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா 7வது இடத்தில் கேஎஸ் பரத் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவார்கள். ஒருவேளை 7வது இடத்தில் அஸ்வின் பேட்டிங் செய்தால் 8வது இடத்தில் பரத் விளையாட சரியானவராக இருப்பார்.

மேலும் 9வது இடத்தில் முகமது சிராஜ் மற்றும் 10வது இடத்தில் நீண்ட நாட்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியும் பெரிய வாய்ப்புகளை பெறாத ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் விளையாட சரியானவர்கள். அத்துடன் 11வது இடத்தில் முகேஷ் குமார் விளையாடுவார். குறிப்பாக ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவருக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கு தாராளமாக வாய்ப்பு கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் தேர்வு செய்த இந்திய அணி:-

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, அஜிங்கிய ரகானே (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்) , முகமது சிராஜ், ஜெயதேவ் உனத்கட், முகேஷ் குமார்.


Next Story