விராட் கோலி இல்லையென்றால்... - இந்திய தேர்வுக்குழுவை எச்சரித்த பாகிஸ்தான் வீரர்


விராட் கோலி இல்லையென்றால்... - இந்திய தேர்வுக்குழுவை எச்சரித்த பாகிஸ்தான் வீரர்
x
தினத்தந்தி 13 March 2024 11:12 AM GMT (Updated: 13 March 2024 12:20 PM GMT)

2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

கராச்சி,

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1 முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. 29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மைதானங்களில் உள்ள பிட்ச் மெதுவாக இருக்கும். எனவே அங்கே டி20 கிரிக்கெட்டில் நங்கூரமாக நின்று சற்று மெதுவாக விளையாடக்கூடிய ஸ்டைலை கொண்ட விராட் கோலியின் அணுகுமுறை இந்திய அணிக்கு பொருந்தாது என்று தேர்வு குழுவினர் கருதுகின்றனர். விராட் கோலியை நீக்குவது இந்திய அணிக்குத்தான் பாதிப்பை கொடுக்கும் என்று இந்த செய்திகளுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி இல்லையென்றால் சொந்த மண்ணில் நடந்த 2023 உலகக்கோப்பையில் இந்தியா 3 - 4 தோல்விகளை சந்தித்திருக்கும் என்று பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் தெரிவித்துள்ளார். எனவே விராட் கோலியை கழற்றி விடுவது இந்தியாவுக்கு பாதிப்பை கொடுக்கும் என்று தேர்வுக்குழுவை எச்சரிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"உங்களால் விராட் கோலி இன்றி அணியை உருவாக்க முடியாது. ஏனெனில் அவர் பெரிய பேட்ஸ்மேன். கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் அவர் இந்தியாவுக்காக 3 - 4 போட்டிகளை தனி ஆளாக வென்றுக் கொடுத்தார். ஒருவேளை அந்தப் போட்டிகளில் விராட் கோலி இறங்கி நிற்காமல் போயிருந்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக லீக் சுற்றில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்த இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும்.

எனவே சமீப காலங்களில் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்புவது நியாயமற்றது. டி20 உலகக்கோப்பையில் அவருடைய இடத்தை பற்றி கேள்வி எழுப்புபவர்கள் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை சேர்ந்தவர்கள்" என்று கூறினார்.


Next Story