திட்டங்களை சரியாக செயல்படுத்தாததும் தோல்விக்கு ஒரு காரணம் - ஷிகர் தவான்


திட்டங்களை சரியாக செயல்படுத்தாததும் தோல்விக்கு ஒரு காரணம் - ஷிகர் தவான்
x

Image Courtesy: AFP

பந்துவீச்சு, பீல்டிங் இரண்டையும் இளம் வீரர்கள் மேம்படுத்த வேண்டும் என கேப்டன் தவான் கூறியுள்ளார்.

ஆக்லாந்து,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி கேப்டன் தவான், சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோரின் அரைசதத்துடன் 306 ரன்கள் குவித்தது.

307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பின் ஆலன் 22 ரன்களும், டிவோன் கான்வே 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டேரில் மிட்சேல் 11 ரன்னுக்கு அவுட்டானார். இதையடுத்து கேப்டன் வில்லியம்சனுடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார்.

இந்த இணை சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தியது. தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய லாதம், அரைசதம் கடந்தபின் அதிரடி காட்டினார். அவர் 104 பந்துகளில் 19 பவுண்டரி, 5 சிக்சருடன் 145 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக நின்று விளையாடிய வில்லியம்சன் 94 ரன்கள் குவித்தார்.

இருவரையும் ஆட்டமிழக்க இந்திய பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திய வியூகங்கள் கடைசி வரையில் பலனளிக்கவில்லை. இதனால் நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு ஷிகர் தவன் பேட்டி கொடுத்தார். அதில்,

''பேட்டிங்கில் சிறப்பாகத்தான் செயல்பட்டோம். பந்துவீச்சிலும் முதல் 10-15 ஓவர்களில் அபாரமாக செயல்பட்டு நெருக்கடியை ஏற்படுத்தினோம். ஆனால், அடுத்து சரியாக செயல்படவில்லை. ஷார்ட் பால்களை தொடர்ந்து வீசிக் கொண்டே இருந்தோம். லதாம் அதனை சிறப்பாக அட்டாக் செய்தார்.

குறிப்பாக (ஷர்தூல் தாகூர் வீசிய) 40ஆவது ஓவரில் போட்டி அப்படியே நியூசிலாந்து பக்கம் சாய ஆரம்பித்தது. 40ஆவது ஓவரில் ஷர்தூல் தாகூர் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசியதால், டாம் லதாம் அதனை சிறப்பாக எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளை விளாசினார்.

இதனால், அந்த ஓவரில் 25 ரன்கள் கசிந்தது. அணியில் இருக்கும் அனைவரும் இளம் வீரர்கள். பந்துவீச்சு, பீல்டிங் இரண்டையும் மேம்படுத்தியே ஆக வேண்டும். திட்டங்களை சரியாக செயல்படுத்தாததும் தோல்விக்கு ஒரு காரணம். அடுத்த போட்டிகளில் இந்த குறைகளை சரிசெய்து, பலமிக்க அணியாக களமிறங்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு தவான் கூறினார்.


Next Story