ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
x

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் ஆடும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்'சுற்றுக்கு முன்னேறும்.

லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் 55-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

டிவான் கான்வே

நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி (லக்னோ, மும்பை 2 முறை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (குஜராத், 2 முறை ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளிடம்), ஒரு முடிவில்லையுடன் (லக்னோவுக்கு எதிராக) 13 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. சென்னை அணி முந்தைய லீக்கில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் தோற்கடித்தது. சொந்த மண்ணில் பரம எதிரியான மும்பையை நீண்ட கால இடைவெளிக்கு பிறகு வீழ்த்திய உற்சாகத்துடன் சென்னை அணி இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

சென்னை அணியில் டிவான் கான்வே (5 அரைசதத்துடன் 458 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட் 3 அரைசதத்துடன் 384 ரன்கள்), ஷிவம் துபே (3 அரைசதத்துடன் 290 ரன்கள்), ரஹானே ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அம்பத்தி ராயுடு ஆட்டம் திருப்திகரமாக இல்லை. பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே(19 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (15 விக்கெட்), பதிரானா (10 விக்கெட்) மொயீன் அலி, தீக்ஷனா, ஆகாஷ் சிங் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

சேப்பாக்கம் மைதானம் சென்னை அணியின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்த சீசனில் இங்கு சென்னை அணி ஆடியுள்ள 5 ஆட்டங்களில் மூன்றில் வெற்றி கண்டது. 2 ஆட்டங்களில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதாவது வெற்றி, தோல்வியை மாறி, மாறி பெற்று வருகிறது. கடந்த போட்டிகளை போல இந்த மோதலுக்கும் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதால் உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் சென்னை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

போட்டி குறித்து சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி நேற்று அளித்த பேட்டியில், 'டெல்லி அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் அந்த அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று நல்ல நிலையில் உள்ளது. எனவே அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் உள்ளனர். அந்த அணியை வீழ்த்த வேண்டும் என்றால் எங்களது 100 சதவீத ஆட்டதிறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்' என்று தெரிவித்தார்.



டெல்லி அணி எப்படி?

டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவிய அந்த அணி அடுத்த 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றிகளை குவித்து எழுச்சி கண்டது. கடைசியாக பலம் பொருந்திய குஜராத், பெங்களூரு அணிகளை அடுத்தடுத்து போட்டு தாக்கியது அந்த அணிக்கு நிச்சயம் கூடுதல் நம்பிக்கையை கொடுத்து இருக்கும்.

டெல்லி அணியில் பேட்டிங்கில் டேவிட் வார்னர் (4 அரைசதத்துடன் 330 ரன்கள்), பில் சால்ட், மனிஷ் பாண்டேவும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மாவும் வலு சேர்க்கிறார்கள். அக்ஷர் பட்டேல் (246 ரன்கள், 7 விக்கெட்), மிட்செல் மார்ஷ் (120 ரன்கள், 9 விக்கெட்) ஆகியோர் ஆல்-ரவுண்டர்களாக அசத்தி வருகிறார்கள்.

உள்ளூரில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்து 'பிளே-ஆப்' சுற்றை நோக்கி தொடர்ந்து முன்னேற சென்னை அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் இந்த ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகி விடும் என்பதால் வெற்றிக்காக எல்லா வகையிலும் டெல்லி அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 17 ஆட்டங்களில் சென்னை அணியும், 10 ஆட்டங்களில் டெல்லி அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இரவு 7.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, அஜிங்யா ரஹானே, அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே, டோனி (கேப்டன்), மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், பதிரானா, துஷர் தேஷ்பாண்டே.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர் (கேப்டன்) பில் சால்ட், மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசவ், அக்ஷர் பட்டேல், அமன் கான், மனிஷ் பாண்டே, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.


Next Story