ஐ.பி.எல்: வெற்றிக்கணக்கை தொடங்குமா மும்பை இந்தியன்ஸ்? ராஜஸ்தானுடன் இன்று மோதல்


ஐ.பி.எல்: வெற்றிக்கணக்கை தொடங்குமா மும்பை இந்தியன்ஸ்? ராஜஸ்தானுடன் இன்று மோதல்
x

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள 14-வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இரு ஆட்டங்களில் குஜராத் மற்றும் ஐதராபாத்திடம் தோற்று புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. கேப்டன்ஷிப்பை ரோகித் சர்மாவிடம் இருந்து ஹர்திக் பாண்ட்யாவிடம் மாற்றியது, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்புரித் பும்ராவை களத்தில் சரியாக பயன்படுத்தாதது இப்படி மும்பையின் பயணம் இந்த தடவை சர்ச்சையுடனே தொடங்கி இருக்கிறது.

மேலும் ரோகித் சர்மாவின் ரசிகர்கள், பாண்ட்யாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வெறுப்பேற்றுகிறார்கள். இதனால் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் ஹர்திக் பாண்ட்யா, அந்த விமர்சனத்தை எல்லாம் சமாளிக்க வெற்றியை பரிசாக அளிப்பதே ஒரே வழியாகும். முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு எதிராக 277 ரன்களை வாரி வழங்கிய மும்பை பவுலர்கள் அந்த தவறை திருத்திக் கொண்டு பரிகாரம் தேட முயற்சிப்பார்கள். மும்பை வான்கடே மைதானம் மும்பை அணிக்கு எப்போதும் ராசியானதாகும். அதனால் உள்ளூரில் இருந்து வெற்றிக்கணக்கை தொடங்கும் உத்வேகத்துடன் வியூகங்களை தீட்டுகிறார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே லக்னோ, டெல்லி அணிகளை தோற்கடித்து இந்த சீசனை சூப்பராக தொடங்கி இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் பெரிய அளவில் கைகொடுக்காத போதிலும் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் அரைசதம் அடித்து வெற்றிக்கு உதவினர். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், யுஸ்வேந்திர சாஹல், நன்ரே பர்கர், அஸ்வின் வலு சேர்க்கிறார்கள். 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ள ராஜஸ்தானின் வீறுநடைக்கு மும்பை அணைபோடுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story