டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கோலிக்கு இடமில்லை?


டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கோலிக்கு இடமில்லை?
x
தினத்தந்தி 12 March 2024 8:23 PM GMT (Updated: 13 March 2024 8:12 AM GMT)

நடப்பாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி நீக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை,

9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட்இண்டீசில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி நீக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஓராண்டுக்கு மேலாக சர்வதேச 20 ஓவர் பேட்டியில் இருந்து ஒதுங்கி இருந்தனர். ஆனால் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் ஆகியோர் காயத்தில் சிக்கியதால் வேறு வழியின்றி ரோகித் சர்மாவும், விராட் கோலியும் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடருக்கு அழைக்கப்பட்டனர். இதில் கடைசி ஆட்டத்தில் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார். விராட் கோலி இரு ஆட்டங்களில் களம் இறங்கி (29 ரன் மற்றும் 0 ) சோபிக்கவில்லை. ரோகித் சர்மாவை பொறுத்தவரை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்று கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே கூறி விட்டது.

ஆனால் 35 வயதான விராட் கோலியின் இடம் தான் கேள்விக்குறியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீசில் உள்ள மெதுவான ஆடுகளங்கள் விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைலுக்கு உகந்த மாதிரி இருக்காது என்று தேர்வு குழு கருதுகிறது. அத்துடன் மிடில் வரிசைக்கு சூர்யகுமார் மற்றும் இளம் வீரர்கள் ரிங்கு சிங், ஷிவம் துபே, திலக் வர்மா வரிசைகட்டி நிற்கிறார்கள். எனவே இளம் வீரர்களுக்கு வழிவிடுவது குறித்து கோலியிடம் பேசும்படி தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரை கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதனால் கோலிக்கு இப்போதைக்கு 20 ஓவர் போட்டி அணியில் இடமில்லை என்பது தெளிவாகிறது. ஒருவேளை ஐ.பி.எல். போட்டியில் கோலி ரன்வேட்டை நடத்தினால், தேர்வு குழுவின் முடிவில் மாற்றம் வரலாம்.


Next Story