மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி...முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தல்


மும்பையை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி...முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தல்
x
தினத்தந்தி 11 May 2024 7:03 PM GMT (Updated: 11 May 2024 7:26 PM GMT)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னே மழை பெய்தது. இதனால் போட்டி தடைபட்டது. மழை விட்ட பின்னர் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. இதனால் ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதில் டாஸ்வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக பும்ரா மற்றும் சாவ்லா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன ரோகித் அதிரடியாக விளையாட முடியாமல் திணறினார். அதிரடியாக விளையாடிய இஷான் 40 ரன்களில் நரைன் பந்து வீச்சில் வீழ்ந்தார். அவரை தொடர்ந்து ரோகித் 24 பந்துகளில் 19 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 11 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 2 ரன்களிலும், டிம் டேவிட் டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். இறுதி கட்டத்தில் திலக் வர்மா மற்றும் நமன் திர் போராடினர். இருப்பினும் இலக்கை நெருங்க முடிந்ததே தவிர எட்ட முடியவில்லை.

முடிவில் மும்பை அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்று அசத்தியுள்ளது.

மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 40 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் ரசல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.


Next Story