அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் இழப்பு; களத்தில் விராட் கோலி கூறியது என்ன...? ராகுல் பேட்டி


அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் இழப்பு; களத்தில் விராட் கோலி கூறியது என்ன...? ராகுல் பேட்டி
x
தினத்தந்தி 8 Oct 2023 5:09 PM GMT (Updated: 9 Oct 2023 12:57 AM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கே.எல். ராகுல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை,

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்ததும், தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர்.

எனினும், இந்திய அணி பந்து வீச்சாளர்களின் அதிரடியால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் எடுத்தது.

200 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்ய தொடங்கியது. ஆனால், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் ரன் ஏதுமின்றி அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சி ஏற்படுத்தினர்.

ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷன் (0) கேட்ச் ஆனார். ஹேசில்வுட் வீசிய 2-வது ஓவரில் ரோகித் சர்மா (0) எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் (0) ஆட்டமிழந்த நிலையில், தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

எனினும், இந்திய அணியின் விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை சரியாக செய்தனர். இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

விராட் கோலி 116 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெற உதவினார். எனினும், அவர் ஆட்டமிழந்ததும் தொடர்ந்து கே.எல். ராகுல் ஷாட்களை அடித்து விளையாடினார்.

இந்த போட்டியில், ராகுல் அதிரடியாக விளையாடி 115 பந்துகளில் 2 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். அவர் ஆட்டமிழக்கவில்லை. இறுதியில் இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகனாக ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர் போட்டி முடிந்த பின்னர் கூறும்போது, கோலியுடன் நிறைய எதுவும் பேசவில்லை. பந்து வீச்சு நிறைவடைந்ததும், ஒரு குளியல் போட்டேன். அரை மணி நேரம் தளர்வாக இருக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால், உடனடியாக விளையாட வேண்டி வந்தது. விராட் என்னிடம், சிறிது நேரம் டெஸ்ட் கிரிக்கெட்டை போல் விளையாடும்படி கூறினார். அணிக்காக இதனை விளையாட மகிழ்ச்சியுடன் இருந்தேன்.

தென்னிந்தியாவில், குறிப்பிடும்படியாக சென்னையில் விளையாடியது நன்றாக இருந்தது என்றே நினைக்கிறேன். கடைசியான ஷாட்டை நன்றாகவே அடித்தேன். பவுண்டரி அல்லது சிக்சர் அடித்து, சதம் எடுக்கலாம் என விரும்பினேன். அது நடக்கவில்லை. வேறு போட்டிகளின்போது சதம் அடிக்கும் தருணம் கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.


Next Story