ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கருத்து
அதிரடியாக சதம் விளாசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இரு அணிகளுக்கிடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று டெல்லியில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் இறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷாகிதி 80 ரன்களும், ஒமர்சாய் 62 ரன்களும் அடித்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெடுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. 273 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் களம் இறங்கினர். இதில் இஷான் கிஷன் ஒரு பக்கம் நிதானமாக விக்கெட் கொடுக்காமல் விளையாடி வந்தார். மறுபக்கம் துவக்கம் முதலே பவுண்டரி மற்றும் சிக்சர்களாக விளாசி வந்த ரோகித் சர்மா 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா 63 பந்துகளில் சதம் அடித்து உலகக்கோப்பையில் தனது 7-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இவர் அடிக்கும் 31-வது சதம் இதுவாகும். இதே நேரம் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களையும் கடந்து சாதனையை படைத்தார். மறுமுனையில் சற்று அதிரடியாக விளையாட ஆரம்பித்த இஷான் கிஷன் துரதிஷ்டவசமாக 47 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டிற்கு ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி 156 ரன்கள் விளாசியது. அடுத்து உள்ளே வந்த விராட் கோலி நிதானமாக ரன் குவிக்க ஆரம்பித்தார். சதம் கடந்து விளையாடி வந்த ரோகித் சர்மா 84 பந்துகளுக்கு 131 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இவர் 16 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்கள் அடித்திருந்தார்.
ரோகித் சர்மா ஆட்டமிழந்ததும் உள்ளே வந்த ஸ்ரேயாஸ் ஐயர் களத்தில் இருந்த விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட 35 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்திய அணி 273 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. விராட் கோலி 55 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சதம் விளாசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றிகுறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, "இது பேட்டிங் செய்ய நல்ல ஆடுகளமாக இருந்தது. எப்போதும் எனது இயல்பான ஆட்டத்தை ஆடவே நான் விரும்புகிறேன். நான் சிறிது நேரம் நின்றால் எனக்கு ஆட்டம் இயல்பாகிவிடும். நான் கொஞ்ச காலமாக இதற்கு வேலை செய்து வருகிறேன். சதம் அடிப்பது சிறப்பானது. ஆனால் நான் ரெக்கார்டுகள் குறித்து அதிகம் யோசிப்பதே இல்லை. ஏனென்றால் நான் முன்னோக்கி செல்ல நீண்ட தூரம் இருக்கிறது. எனவே நான் என் கவனத்தை இழக்காமல் இருக்க வேண்டும்.மேலும் என்ன தேவை என்பதை நான் அறிவேன். இது போன்ற நாட்களில் அதை கணக்கிட வேண்டும்.
என்னுடைய ஆட்டத்தில் சிலவை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவை. எல்லா நேரமும் பெரிய ஷாட்கள் விளையாட முடியாது. சில நேரம் நீங்கள் உங்கள் உள்ளுணர்வின் படி செயல்படுகிறீர்கள். இது இரண்டும் கலந்த கலவை. நீண்ட நாட்கள் கழித்து .உலகக் கோப்பையில் சதம் அடித்தது ஒரு தனி உணர்வு. நிஜமாகவே மகிழ்ச்சியாக உள்ளது.
அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து நல்ல நிலைக்கு எடுத்துச் செல்வது என்னுடைய பொறுப்பு என்று எனக்கு தெரியும். இது நான் சில காலம் விரும்பி செய்த ஒன்று. அது வேலை செய்யும் பொழுது நன்றாக இருக்கும். இது எப்பொழுதுமே வேலை செய்யாது. ஆனால் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க நான் என்னை இப்படியே வைத்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.