எனது வளர்ச்சியில் தோனி பெரும் பங்கு வகித்தார்- ஹர்திக் பாண்டியா


எனது வளர்ச்சியில் தோனி பெரும் பங்கு வகித்தார்- ஹர்திக் பாண்டியா
x

Image Courtesy: ICC

தோனியின் மனநிலை மற்றும் அறிவு களத்தில் தனது ஆளுமையில் பிரதிபலித்ததாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

துபாய்,

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில்நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

பாண்டியா இந்த போட்டியில் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். பந்துவீச்சில் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

2016 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் ஆல்ரவுண்ட் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வந்த பாண்டியா அவ்வப்போது காயங்களால் அவதிப்பட்டு வந்ததால் பந்துவீச்சில் சிரமங்களை சந்தித்தார். பின்னர் காயத்திலிருந்து மீண்டு இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடத்தி மகுடம் சூட வைத்தார்.

அதை தொடர்ந்து இந்திய அணிக்கும் மீண்டும் கம்பேக் கொடுத்து கலக்கி வருகிறார். கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்கள் அவரை பாராட்டிய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் கிரிக்கெட் வீரராக தனது வளர்ச்சியில் எம்எஸ் தோனி பெரும் பங்கு வகித்ததாக ஹர்திக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் தலைசிறந்த முன்னாள் கேப்டன் தோனி பற்றி பாண்டியா கூறியதாவது:

"வாழ்க்கை மற்றும் விளையாட்டைப் பற்றி புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முயற்சிக்கும் புதிய மாணவனாக நான் இருந்தேன். என் வளர்ச்சியில் எம்எஸ் தோனி பெரும் பங்கு வகித்தார். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் அவரைப் பார்த்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

அவர் மனநிலை மற்றும் அறிவை கவனித்தபோது, அது களத்தில் எனது ஆளுமையில் பிரதிபலித்தது. தோல்வியடைவது மற்றும் அவற்றிலிருந்து கற்றுக்கொள்வது பற்றி அவரிடமிருந்து தெரிந்து கொண்டேன். சில சமயங்களில், தோல்விகள்தான் உங்களுக்குக் கற்பிக்கின்றன. சில தோல்விகளை நீங்கள் அனுபவிக்கிறீர்கள், அதிலிருந்து பின்னர் கற்றுக்கொள்கிறீர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story