ரோகித்தை கட்டி அணைத்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக்...முடிவுக்கு வந்த சர்ச்சை


ரோகித்தை கட்டி அணைத்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக்...முடிவுக்கு வந்த சர்ச்சை
x

image courtesy: PTI

தினத்தந்தி 21 March 2024 6:14 AM GMT (Updated: 21 March 2024 6:15 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கடந்த இரண்டு மாதங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் நீடித்து வந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

மும்பை,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.

இந்த தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. மும்பை அணி இந்த கோப்பைகளை ரோகித் சர்மா தலைமையில்தான் வென்றது. இருப்பினும் மும்பை அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை அந்த பொறுப்பில் கொண்டு வந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.

ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு ரோகித் சர்மா ஒரு முறை கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. மேலும் ரோகித் சர்மாவை ஏன் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கினோம் என்பது குறித்து பயிற்சியாளர் மார்க் பவுச்சர் வெளியிட்ட விளக்கத்தை ரோகித் மனைவி நிராகரித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். அது பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தியது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாம், கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இதில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா நேற்றுதான் வந்தார். அப்போது கூட ஹர்திக் பாண்ட்யாவை அவர் சந்திக்காமல் சென்று விட்டார் என்று செய்திகள் வெளியானது. இதுபோன்று வீரர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றபோது கூட ரோகித் சர்மா பங்கேற்கவில்லை என்ற செய்தி வெளியானது.

இந்த நிலையில் பயிற்சி முகாமில் வீரர்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது ரோகித் சர்மாவை பார்த்த ஹர்திக் பாண்ட்யா நேரடியாக அவரிடம் சென்று கட்டி அணைத்தார். இதனால் ரோகித் சர்மாவும் அவரை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். இதனைப் பார்த்த மற்ற வீரர்கள் கைதட்டி வரவேற்றனர். அதன் பிறகு பயிற்சியாளர் மார்க் பவுச்சர், அனைத்து வீரர்களையும் அழைத்து இந்த சீசனுக்கான யுக்திகளை பேச ஆரம்பித்தார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த சர்ச்சை முடிவுக்கு வந்ததாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story