இந்திய அணியில் மீண்டும் நடராஜன் சேர்வதற்கான நேரம் வெகு தொலைவில் இல்லை - ஐதராபாத் அணியின் பயிற்சியாளர்


இந்திய அணியில் மீண்டும்  நடராஜன் சேர்வதற்கான நேரம் வெகு தொலைவில் இல்லை - ஐதராபாத் அணியின் பயிற்சியாளர்
x

image courtesy: AFP

நடராஜனுக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் நிறைய ஆதரவு இருப்பதாக ஜேம்ஸ் பிராங்ளின் தெரிவித்துள்ளார்.

மும்பை,

டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி கடந்த மாதம் 30-ம் தேதி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விக்கெட் கீப்பர்களாக நல்ல பார்மில் உள்ள ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் அந்த அணியில் தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்த அணியில் வேகப்பந்து வீச்சு துறையில் தேர்வாகியுள்ள முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை விட நடப்பு ஐ.பி.எல். தொடரில் நடராஜன் குறைந்த எக்கனாமியில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் அப்படிப்பட்ட அவரை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இணைக்காத தேர்வுக் குழு கலீல் அகமது, ஆவேஷ் கானை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்நிலையில் சிறப்பாக பந்து வீசி வரும் நடராஜனுக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் நிறைய ஆதரவு இருப்பதாக ஐதராபாத் அணியின் பவுலிங் பயிற்சியாளரான ஜேம்ஸ் பிராங்ளின் தெரிவித்துள்ளார். எனவே எஞ்சிய ஐ.பி.எல். தொடரிலும் இதேபோல அசத்தும் பட்சத்தில் இந்திய அணியில் நடராஜன் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகு தூரத்தில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. "இந்தியாவில் நிறைய தரமான வீரர்கள் உள்ளனர். எனவே நடராஜன் தம்மால் முடிந்ததை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். யார்க்கர் பந்துகள் அவருடைய பலமாக இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே அவர் எங்களுடைய அணியின் சொத்தாகவும் திகழ்கிறார். இந்தியாவில் அவரைப் பற்றி நிறைய பேச்சுக்கள் காணப்படுகின்றன. எனவே ஒருவேளை நடராஜன் இதேபோல தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் தம்முடைய பார்மை தக்க வைத்துக் கொண்டால் அந்தப் பேச்சுக்களே அவருக்கான வாய்ப்பை கவனித்துக் கொள்ளும். அதனால் தொடர்ந்து இதே போல விளையாடும் பட்சத்தில் மீண்டும் இந்திய அணியில் நடராஜன் சேர்வதற்கான நேரம் வெகு தொலைவில் இல்லை" என்று கூறினார்.


Next Story