'நினைத்த மாதிரி எங்களது பந்துவீச்சு அமையவில்லை' - ரோகித் சர்மா


நினைத்த மாதிரி எங்களது பந்துவீச்சு அமையவில்லை - ரோகித் சர்மா
x

இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் நினைத்த மாதிரி பந்துவீச்சு இல்லாததால் தோல்வி ஏற்பட்டது என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

அடிலெய்டு,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் மோசமான தோல்வி கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக்கி விட்டது. இறுதிப்போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் இந்தியா மீண்டும் மோதும் வாய்ப்பு உருவாகும் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் நொந்து போனார்கள்.

வீரர்களின் பகுதியில் அமர்ந்திருந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா வேதனை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டார். பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவர் கூறியதாவது:-

"நாங்கள் விளையாடிய விதம் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. பேட்டிங்கில் கடைசி கட்டத்தில் நன்றாக ஆடி நல்ல ஸ்கோரை பெற்றோம். ஆனால் பந்து வீச்சில் நாங்கள் சரியாக இல்லை. நிச்சயமாக 16-17 ஓவருக்குள் ஓர் அணி இலக்கை எட்டுவதற்கான ஆடுகளம் இது அல்ல. ஆனால் நாங்கள் நினைத்த மாதிரி பந்து வீச்சு அமையவில்லை.

இது போன்ற 'நாக்-அவுட்' ஆட்டங்களில் நெருக்கடியை திறம்பட சமாளிப்பது முக்கியம். நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்பதை யாருக்கும் கற்றுக் கொடுக்க முடியாது. இது தனிநபரை சார்ந்த விஷயம். இத்தகைய வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் பிளே-ஆப் சுற்றில் நெருக்கடியான தருணங்களை நன்றாக எதிர்கொண்டு விளையாடி இருக்கிறார்கள்.

எல்லா சிறப்பும் இங்கிலாந்து தொடக்க வீரர்களையே சேரும். உண்மையிலேயே அவர்கள் சிறப்பாக விளையாடினர். நாங்கள் நேர்த்தியாக பந்து வீசி அவர்கள் ரன்கள் எடுத்திருந்தால் அதை ஏற்றுக் கொண்டிருப்போம். ஆனால் அதை நாங்கள் செய்யவில்லை. புவேனஷ்வர்குமார் முதல் ஓவரை வீசிய போது பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. ஆனால் பந்தை சரியான பகுதியில் 'பிட்ச்' செய்து வீசவில்லை.

இந்த மைதானத்தில் எந்த பகுதியில் எளிதாக ரன் எடுக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும். அதற்கு ஏற்ப எங்களது திட்டங்களை செயல்படுத்த தவறிவிட்டோம்."

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story