'பாகிஸ்தான் ஒரு விதிவிலக்கான அணி'- ரவிச்சந்திரன் அஸ்வின்


பாகிஸ்தான் ஒரு விதிவிலக்கான அணி- ரவிச்சந்திரன் அஸ்வின்
x
தினத்தந்தி 30 Aug 2023 11:45 AM GMT (Updated: 30 Aug 2023 11:47 AM GMT)

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி மோத உள்ளன.

புது டெல்லி,

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இதன் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன.

இதில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி வரும் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதே சமீப காலங்களில் அந்த அணியின் எழுச்சிக்கான ரகசியம் என்று ரவிச்சந்திரன் பாராட்டியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு;-

பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் மிடில் ஆர்டரில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்த ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் நிச்சயம் அபாயகரமான அணியாக இருக்கும். பாகிஸ்தான் ஒரு விதிவிலக்கான அணி என்று கூறினார்.

மேலும் கடந்த 5 – 6 வருடங்களில் பாகிஸ்தானின் எழுச்சிக்கு பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் அதிகமாக பங்காற்றியுள்ளனர். உள்ளூரில் டேப் பந்தில் விளையாடுவதால் அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கி வருகிறார்கள். ஆனால் வெளிநாட்டுத் தொடர்களில் விளையாடுவதே பாகிஸ்தான் வளர்ச்சி காண்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

குறிப்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் அவர்களுடைய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் லீக் தொடரின் ஏலத்தில் 60 – 70 வீரர்கள் வரை கலந்து கொண்டு பலர் விளையாடும் வாய்ப்புகளை பெறுகின்றனர். அது போக இங்கிலாந்து, அமீரகம், வெஸ்ட் இண்டீஸ் போன்ற பல்வேறு நாடுகளில் நடைபெறும் தொடர்களில் அவர்கள் விளையாடுகின்றனர். அதன் காரணமாகவே கடந்த 5 – 6 வருடங்களில் தரமான வீரர்களை உருவாக்கி உள்ளது. அதனாலேயே பாகிஸ்தான் பெரிய தொடர்களில் சிறப்பான செயல்பாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.


Next Story