இதை செய்தால் மட்டுமே ரஞ்சி கோப்பையை காப்பாற்ற முடியும் - பி.சி.சி.ஐ.க்கு கவாஸ்கர் கோரிக்கை


இதை செய்தால் மட்டுமே ரஞ்சி கோப்பையை காப்பாற்ற முடியும் - பி.சி.சி.ஐ.க்கு கவாஸ்கர் கோரிக்கை
x

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.

மும்பை,

இந்தியா இன்று உலக கிரிக்கெட்டில் ஓங்கி நிற்பதற்கு உள்ளூர் போட்டியான ரஞ்சிக் கோப்பை தொடர்தான் ஆழமான விதையாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் ரஞ்சிக் கோப்பையில் அசத்தும் வீரர்களுக்கே இந்திய அணியில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் ரஞ்சிக் கோப்பையில் இருந்தே சுனில் காவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்ற பல ஜாம்பவான்கள் இந்தியாவுக்காக விளையாடி சாதனைகள் படைத்தனர்.

ஆனால் சமீப காலங்களில் ஐ.பி.எல். தொடருக்கு முன்னுரிமை கொடுக்கும் இந்திய வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாட யோசிக்கின்றனர். அதேவேளை ரஞ்சி கோப்பையில் விளையாடுமாறு இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 2 வீரர்களை பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டது. ஆனால் அதை செய்யத் தவறியதால் 2023 - 24 இந்திய கிரிக்கெட் அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து அந்த 2 வீரர்களையும் பி.சி.சி.ஐ. அதிரடியாக நீக்கியது.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்காக புதிய ஊக்கத்தொகை திட்டத்தையும் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார். அதன் படி ஒரு வருடத்தில் 75 சதவீதம் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக 45 லட்சம் வழங்கப்படும். அதேபோல 50 சதவீதம் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு ரூ. 30 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிவிப்புகளால் மட்டும் ரஞ்சி கோப்பை காப்பாற்ற முடியாது என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே ரஞ்சிகோப்பை போட்டிகளுக்கும் சம்பளத்தை உயர்த்தினால் மட்டுமே அதில் விளையாடுவதற்கு வீரர்கள் ஆர்வத்தை காட்டுவார்கள் என்று பி.சி.சி.ஐ.க்கு கவாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;-

"டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுபவர்களுக்கு வெகுமதி அளிக்கும் பி.சி.சி.ஐ.யின் இந்த முடிவு அற்புதமானது. ஆனால் ரஞ்சி கோப்பை டெஸ்ட் தொடருக்கும் ஊட்டமளிப்பதை பி.சி.சி.ஐ. உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை ரஞ்சி கோப்பை தொடருக்கான சம்பளம் 2 அல்லது 3 மடங்கு அதிகரிக்கப்பட்டால் அதில் விளையாடுவதற்கு பலரும் விரும்புவார்கள். ரஞ்சிக் கோப்பையில் விளையாடாமல் வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் குறையும். குறிப்பாக சம்பளம் அதிகமாக கொடுக்கப்படும்போது பல்வேறு காரணங்களை சொல்லி வீரர்கள் வெளியேறுவது குறைந்து விடும்" என்று கூறினார்.


Next Story