மரியாதையும் விசுவாசமும் கட்டளை போடுவதால் மட்டும் கிடைத்து விடாது- எம்.எஸ். தோனி


மரியாதையும் விசுவாசமும் கட்டளை போடுவதால் மட்டும் கிடைத்து விடாது- எம்.எஸ். தோனி
x

image courtesy; AFP

தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர்.

அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். அதனால் எங்கு சென்றாலும் தோனிக்கு அனைத்து இந்நாள் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து பாராட்டுவது வழக்கமாகும்.

இந்நிலையில் மரியாதையும் விசுவாசமும் கேப்டன் பதவியிலிருந்து கட்டளை போடுவதால் மட்டும் கிடைத்து விடாது என எம்.எஸ். தோனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு;-" உடைமாற்றும் அறையை பற்றி நீங்கள் பேசும்போது துணை ஊழியர்கள் அல்லது வீரர்கள் உங்களை மதிக்காவிட்டால் விசுவாசத்தை பெறுவது கடினம். அது உண்மையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. என்ன பேசுகிறீர்கள் என்பதை பற்றியது அல்ல. நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

ஆனால் உங்களுடைய நடத்தைதான் மரியாதையை பெற்றுக்கொடுக்கும். எப்போதும் மரியாதையை சம்பாதிப்பது முக்கியம் என்று நான் கருதுவேன். ஏனெனில் அது உங்களுடைய நடத்தையுடன் வருகிறது. வீரர்கள் சில சமயங்களில் அழுத்தமான நிலையில் இருப்பார்கள். அதை சரி செய்ய அவர்கள் மீது கட்டளை செலுத்தக்கூடாது. சிலர் அழுத்தத்தை விரும்புவார்கள். சிலர் விரும்ப மாட்டார்கள். வீரர்கள் தங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வது அவசியம். இது ஒரு வீரர் தன்னை தன்னம்பிக்கையுடன் வைத்திருக்க உதவுகிறது.

மரியாதையும் விசுவாசமும் கேப்டன் பதவியிலிருந்து கட்டளை போடுவதால் மட்டும் கிடைத்து விடாது. மரியாதையை இயற்கையாக பெற வேண்டும். அந்த வகையில் ஒரு முறை நீங்கள் இயற்கையான விசுவாசத்தை உருவாக்கி விட்டால் பின்னர் நல்ல செயல்பாடுகள் தாமாக வரும்" என்று கூறினார்.


Next Story