ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை - ஹர்திக்


ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை - ஹர்திக்
x

image courtesy; AFP

தினத்தந்தி 18 March 2024 10:58 AM GMT (Updated: 18 March 2024 3:15 PM GMT)

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சி.எஸ்.கே - ஆர்.சி.பி. அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இரவு 8 மணியளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த வருட ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார். கடந்த 2 வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யாவை இந்த வருடம் மும்பை அணி வாங்கி அவரை கேப்டனாக நியமித்துள்ளது. மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா ஒரு சாதாரண வீரராக மட்டும் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்திக்கை கேப்டனாக நியமித்ததற்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது வரை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாம் கேப்டனாக பொறுப்பேற்றதை விமர்சிக்க ரசிகர்களுக்கு உரிமை இருப்பதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.இருப்பினும் அனைத்தையும் கடந்து மும்பைக்கு 6-வது கோப்பையை வென்று கொடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"முதலில் ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில் உதவி தேவைப்பட்டால் எனக்காக அவர் இருப்பார். அதே சமயம் இந்திய அணியின் கேப்டனாக அவர் இருப்பது எனக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் மும்பை அணி அவருடைய தலைமையில் பெரிய சாதனைகளை படைத்துள்ளது. அதை நான் இப்போதிலிருந்து முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறேன். அவருடைய கேப்டனாக இருப்பது எனக்கு எந்த வித்தியாச உணர்வையும் கொடுக்கவில்லை.

அவருடைய தலைமையில் நான் என்னுடைய கெரியர் முழுவதும் விளையாடியுள்ளேன். எனவே சீசன் முழுவதும் அவர் எனக்கு ஆதரவாக தோள் மீது கை போட்டு உதவுவார் என்பது எனக்கு தெரியும். ரோகித் நீக்கப்பட்ட முடிவு சற்று பின்னடைவாகும். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நாங்கள் ரசிகர்களை மதிக்கிறோம். அதே நேரம் விளையாட்டில் கவனம் செலுத்துகிறோம். நான் முரண்பாடுகளை கட்டுப்படுத்துகிறேன். என்னால் கட்டுப்படுத்த முடியாத இடத்தில் கவனம் செலுத்தவில்லை. அதே சமயம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் சொல்வதை சொல்ல முழு உரிமை உண்டு" என்று கூறினார்.


Next Story