தனது உலக சாதனையை முறியடித்த விராட் கோலியை, நெகிழ்ச்சியுடன் பாராட்டிய சச்சின்..!


தனது உலக சாதனையை முறியடித்த விராட் கோலியை, நெகிழ்ச்சியுடன் பாராட்டிய சச்சின்..!
x

சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று சச்சின் கூறியுள்ளார்.

மும்பை,

உலகக்கோப்பை தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் விராட் கோலி 117 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார்.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி 50-வது சதமடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். 279 ஒருநாள் இன்னிங்சில் விளையாடியுள்ள விராட் கோலி தனது 50-வது சதத்தை நிறைவு செய்தார். ஆட்டத்தை நேரில் கண்டு களித்து வரும் சச்சின் தெண்டுல்கர் முன்னிலையில் அவரது சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

இந்த நிலையில் தனது உலக சாதனையை முறியடித்த விராட் கோலியை சச்சின் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, சக வீரர்கள் என் கால்களைத் தொடும்படி கேலி செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் 'விராட்' வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட, நான் மகிழ்ச்சியடைய வேறேதும் இல்லை. அதுவும் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி என்ற மிகப் பெரிய அரங்கிலும், எனது சொந்த மைதானத்திலும் இதனை செய்திருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.



Next Story