சாய் சுதர்சன் அரைசதம்: லைகா கோவை கிங்ஸ் 181 ரன்கள் குவிப்பு...!


சாய் சுதர்சன் அரைசதம்: லைகா கோவை கிங்ஸ் 181 ரன்கள் குவிப்பு...!
x

Image Courtesy: @TNPremierLeague

லைகா கோவை கிங்ஸ் தரப்பில் சாய் சுதர்சன் 90 ரன்கள் அடித்தார்.

கோவை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோவையில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின், சுரேஷ் குமார் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சச்சின் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். இதையடுத்து சாய் சுதர்சன் களம் இறங்கினார். சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய சுரேஷ் குமார் 33 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து ராம் அரவிந்த் களம் இறங்கினார்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்சன் அரைசதம் அடித்து அசத்தினார். அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் சோனு யாதவின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராம் அரவிந்த் 18 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து கேப்டன் ஷாருக்கான் களம் இறங்கினார். அபாரமாக ஆடி வந்த சாய் சுதர்சன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 52 பந்தில் 90 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அவர் அவுட்டான அடுத்த பந்திலேயே ஹாருக்கான் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி களம் இறங்க உள்ளது.


Next Story