டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இலங்கை சுழற்பந்து வீச்சாளர் திடீர் ஓய்வு


டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இலங்கை சுழற்பந்து வீச்சாளர் திடீர் ஓய்வு
x
தினத்தந்தி 15 Aug 2023 8:01 PM GMT (Updated: 16 Aug 2023 10:23 AM GMT)

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கொழும்பு,

டெஸ்டுக்கு 'குட்பை'

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா. ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் விக்கெட் வேட்டை நடத்தும் அவரால் டெஸ்ட் போட்டியில் ஜொலிக்க முடியவில்லை. இதுவரை 4 டெஸ்டுகளில் விளையாடி 4 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் அவருக்கு டெஸ்ட் அணியில் சீராக இடம் கிடைக்கவில்லை. டெஸ்ட் தொடருக்கு தயாராகும் பயிற்சி முகாமுக்கு அழைக்கும் அவரை டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்வதில்லை. பயிற்சி முகாமில் தன்னை ஈடுபடுத்தி கொள்வதன் மூலம் சில 20 ஓவர் லீக் வாய்ப்புகளை பறிகொடுத்துள்ளார். இந்த வகையில் தான் அவர் அமெரிக்காவில் சமீபத்தில் முடிந்த மேஜர் லீக் கிரிக்கெட்டில் விளையாட முடியாமல் போனது.

இந்த நிலையில் 26 வயதான ஹசரங்கா திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற முடிவு எடுத்துள்ளார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வா கூறுகையில், 'ஆல்-ரவுண்டர் ஹசரங்கா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். குறுகிய வடிவிலான போட்டிகளில் நீண்ட காலம் விளையாட விரும்புவதாகவும், அதனால் டெஸ்டை துறப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது முடிவை ஏற்றுக்கொள்கிறோம். இனி வெள்ளைநிற பந்து கிரிக்கெட் போட்டிக்கான அணியில் அவர் முக்கிய வீரராக அங்கம் வகிப்பார் என்று நம்புகிறோம்' என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில்...

ஹசரங்கா 2017-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்தார். சுழல் ஜாலத்தில் மிரட்டுவதுடன் அதிரடியாக பேட்டிங்கும் செய்யக்கூடியவர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் அவர் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

48 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளுடன், 4 அரைசதம் உள்பட 832 ரன்களும் எடுத்துள்ளார். 58 இருபது ஓவர் போட்டிகளில் 91 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சஸ் அணிக்காக ரூ.10¾ கோடி சம்பளம் பெற்று விளையாடுகிறார். இது தவிர லங்கா பிரிமீயர் லீக், கரிபீயன் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் ஐ.எல். லீக் ஆகிய போட்டிகளிலும் ஆடுகிறார்.


Next Story