டிஎன்பிஎல்; திருப்பூர் போராட்டம் வீண்...த்ரில் வெற்றி பெற்ற சேலம் ஸ்பார்டன்ஸ்...!


டிஎன்பிஎல்; திருப்பூர் போராட்டம் வீண்...த்ரில் வெற்றி பெற்ற சேலம் ஸ்பார்டன்ஸ்...!
x

Image Courtesy: @TNPremierLeague

8 அணிகள் இடையிலான 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

திருநெல்வேலி,

8 அணிகள் இடையிலான 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக அரவிந்த் 1 ரன், கெளஷிக் காந்தி 0 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய சன்னி சந்து ஒரு முனையில் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் கவின் 19 ரன், மோஹித் ஹரிஹரன் 3 ரன், அபிஷேக் 10 ரன், அட்னான் கான் 15 ரன், கேப்டன் அபிஷேக் தன்வர் 17 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 155 ரன்களே எடுத்தது. சேலம் அணி தரப்பில் சன்னி சந்து 61 ரன்கள் எடுத்தார். திருப்பூர் அணி தரப்பில் புவனேஷ்வரன் 3 விக்கெட்டும், திரிலோக் நாக், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி ஆடியது.

திருப்பூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ராதாகிருஷ்ணன் 16 ரன்னும், துஷார் ரஹேஜா 22 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து களம் இறங்கிய சீனியர் வீரர்கள் சாய் கிஷோர் 26 ரன்னும், விஜய் ஷங்கர் 12 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதனால் திருப்பூர் அணி 84 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து அனிருத், சதுர்வேத் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் அனிருத் 22 ரன்னிலும், சதுர்வேத் 11 ரன்னிலும், அடுத்து வந்த விவேக், புவனேஸ்வரன் தலா 6 ரன்னிலும் வீழ்ந்தனர்.

இறுதியில் திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களே எடுத்தது. இதன் மூலம் சேலம் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேலம் அணி தரப்பில் சச்சின் ரதி, செல்வகுமார் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


Next Story