டி.என்.பி.எல். கிரிக்கெட்: 2-வது நாளில் கிரண் ஆகாஷ் ரூ.6½ லட்சத்துக்கு ஏலம் கோவை அணி வாங்கியது


டி.என்.பி.எல். கிரிக்கெட்: 2-வது நாளில் கிரண் ஆகாஷ் ரூ.6½ லட்சத்துக்கு ஏலம் கோவை அணி வாங்கியது
x

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஏலத்தில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் கிரண் ஆகாஷ்சை ரூ.6½ லட்சத்துக்கு கோவை கிங்ஸ் அணி வாங்கியது.

சென்னை,

8 அணிகள் பங்கேற்கும் 7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் திண்டுக்கல், கோவை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஹென்சஸ் நட்சத்திர ஓட்டலில் கடந்த 2 நாட்கள் நடந்தது.

முதல் நாள் ஏலத்தில் 76 வீரர்களை போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் தங்கள் பக்கம் இழுத்தன. அதிகபட்சமாக சாய் சுதர்சனை ரூ.21.60 லட்சத்துக்கு கோவை கிங்ஸ் வாங்கியது. அதற்கு அடுத்தபடியாக ஆல்-ரவுண்டர் சஞ்சய் யாதவை ரூ.17.60 லட்சத்துக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சொந்தமாக்கியது.

நேற்று 2-வது மற்றும் கடைசி நாள் ஏலம் நடந்தது. ஒவ்வொரு அணியினரும் தங்களிடம் மீதமிருந்த தொகைக்கு ஏற்ப தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வியூகங்களுடன் செயல்பட்டனர். 'டி' பிரிவில் உள்ள வீரர்களை குறைந்த விலையில் எடுக்க எல்லா அணிகளும் முயற்சித்தன.

2-வது நாள் ஏலத்தில், கடந்த சீசனில் மதுரை பாந்தர்ஸ் அணிக்காக ஆடிய 26 வயது வேகப்பந்து வீச்சாளர் கிரண் ஆகாஷ் அதிக தொகைக்கு போனார். அதாவது அவரை ரூ.6½ லட்சத்துக்கு கோவை கிங்ஸ் அணி வாங்கியது. அவரை வசப்படுத்த பல அணிகள் ஆர்வம் காட்டினாலும் இறுதியில் கோவைக்கே வெற்றி கிடைத்தது. இதே போல் ஆல்-ரவுண்டர் முகிலேஷ்சை (ரூ.6 லட்சம்) கோவை அணி மீண்டும் தங்கள் படையில் இணைத்தது. அத்துடன் 22 வயது புதுமுக வீரரான ராம் அரவிந்தை அந்த அணி ரூ.3.05 லட்சத்துக்கு எடுத்தது.

கடந்த சீசனில் கோவை அணிக்காக ஆடிய சுழற்பந்து வீச்சாளர் பி.சூர்யாவை மதுரை அணி ரூ.4.40 லட்சத்துக்கு தட்டிச் சென்றது.

4 முறை சாம்பியான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதன்குமார், சந்தோஷ் ஷிவ், விஜூ அருள், லோகேஷ் ராஜ், ராக்கி, அய்யப்பன் ஆகியோரை அடிப்படை விலையில் (ரூ.50 ஆயிரம்) வாங்கியது.

நேற்று 68 வீரர்கள் விலை போனார்கள். இரண்டு நாள் ஏலத்தையும் சேர்த்து மொத்தம் 144 வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டு இருக்கின்றனர்.

ஏலம் முடிந்த பிறகு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி கூறுகையில், 'டி.என்.பி.எல். கிரிக்கெட் ஏலம் குறிப்பிடத்தக்க வரலாறு படைத்துள்ளது. வீரர்களின் திறமைக்கு ஏற்ப அணி நிர்வாகம் ஏலத்தில் எடுக்கும் இந்த முறை பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இது ஒரு தொடக்கம் தான். வரும் ஆண்டுகளில் இந்த போட்டி தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.


Next Story