விராட் கோலி தனது 50வது ஒருநாள் சதத்தை இந்த மைதானத்தில் அடிப்பார் - சுனில் கவாஸ்கர்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்திய அணி தற்போது வரை தனது 5 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் (49) உலக சாதனையை முறியடிக்க இன்னும் இரண்டு சதங்களே எஞ்சி உள்ளது.
விராட் கோலி இந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சவால் மிகுந்த போட்டிகளில் 85, 95 ரன்கள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 ரன்னில் சதத்தை தவறவிட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் (49) உலக சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை தவற விட்டது சில ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில், விராட் கோலி தனது 50வது ஒருநாள் சதத்தை இந்த மைதானத்தில் அடிப்பார் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறியதாவது,
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி தன்னுடைய 50வது ஒருநாள் சதத்தை அடிப்பார். அதை அன்று அவர் தம்முடைய பிறந்தநாளில் அடிப்பதை விட வேறு என்ன ஸ்பெஷல் இருக்க முடியும்?.
கொல்கத்தாவில் நடைபெறும் அந்தப் போட்டிக்கு முன்பாக விளையாடும் 2 போட்டிகளில் அவர் தனது 49வது சதத்தை அடிப்பார். மேலும் ஈடன் கார்டன்ஸ் எப்போதுமே பெரிய ரன்கள் அடிக்கக்கூடிய மைதானமாகவும் அதிக ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் அரங்கமாகவும் இருந்து வருகிறது.
எனவே அங்கே நீங்கள் சதமடித்தால் கொல்கத்தா ரசிகர்கள் உங்களுக்கு எழுந்து நின்று கைதட்டி, விசிலடித்து, உங்களை பாராட்டிக் கொண்டாடுவார்கள். அது போன்ற தருணம் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் மறக்க முடியாத ஒன்றாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.