கேப்டன்ஷிப் தடையை நீக்குவதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் பேச தயாராக இருக்கும் வார்னர்


கேப்டன்ஷிப் தடையை நீக்குவதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் பேச தயாராக இருக்கும் வார்னர்
x

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய வார்னருக்கு ஆஸ்திரேலியாவில் எந்த போட்டிகளிலும் கேப்டன்ஷிப் வகிக்க முடியாதபடி ஆயுட்கால தடையை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் விதித்தது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், பான்கிராப்ட் ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கினர். இதில் வார்னர், சுமித்துக்கு தலா ஒரு ஆண்டு விளையாட தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சூத்திரதாரியாக வார்னர் செயல்பட்டது தெரியவந்ததால், அவருக்கு ஆஸ்திரேலியாவில் எந்த போட்டிகளிலும் கேப்டன்ஷிப் வகிக்க முடியாதபடி ஆயுட்கால தடையை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் விதித்தது.

தடை முடிந்து ஒரு வீரராக சிறப்பாக ஆடும் 35 வயதான வார்னரால் கேப்டனாக முடியவில்லை. இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஓய்வு பெற்றிருப்பதால் அந்த பதவியை பிடிக்க வார்னரும் விரும்புகிறார். இதனால் தனக்கு விதிக்கப்பட்ட கேப்டன்ஷிப் தடையை விலக்கும்படி தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், 'கேப்டன்ஷிப் வாய்ப்பு குறித்து என்னிடம் எந்த மாதிரி அணுகினாலும் அது கவுரவம் தான். ஆனால் என்னுடைய விஷயத்தை பொறுத்தவரை எல்லாமே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கையில் தான் உள்ளது. எனது பணி முடிந்த வரை சிறப்பாக விளையாடி ரன் குவிப்பது தான். கடந்த காலத்தில் செய்தது முடிந்த போன விஷயம்.

செல்போன் எனது பக்கத்திலேயே இருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் புதிய நிர்வாகிகள் உள்ளனர். கேப்டன்ஷிப் குறித்து அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு ஆலோசித்தால் அதற்கு பதில் அளிக்க எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன். அடுத்த சில வாரங்களில் பேச்சுவார்த்தை நடக்கக்கூடும் என்று நம்புகிறேன்' என்றார்.


Next Story