'தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம்' - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்


தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்
x

தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்தார்.

சென்னை,

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது.

அதிரடியில் தூள் கிளப்பிய ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் ரமனுல்லா குர்பாசுக்கு, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது பேட்டை பரிசாக வழங்கி பாராட்டினார். பின்னர் பாபர் அசாம் நிருபர்களிடம் கூறியதாவது:-

"இந்த தோல்வி எங்களை ரொம்பவே காயப்படுத்தி விட்டது. 280-290 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைத்தபடி சாதித்தோம். ஆனால் எங்களது பந்து வீச்சு மற்றும் பீல்டிங் தரத்துக்கு தகுந்தபடி அமையவில்லை. மிடில் ஓவர்களில் எதிர்பார்த்த அளவுக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசவில்லை. எங்களுக்கு விக்கெட் தேவையாக இருந்தது. அதை செய்ய தவறி விட்டோம்.

2-வது பாதியிலும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவே காணப்பட்டது. இருப்பினும் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்தை வீசவில்லை. ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரியை விட்டுகொடுத்தோம். இதனால் அவர்களது பேட்ஸ்மேன்கள் மீது எங்களால் அழுத்தம் கொடுக்க இயலவில்லை. எல்லா துறைகளிலும் ஒரேநேரத்தில் எங்களால் நேர்த்தியாக செயல்பட முடியவில்லை. பவுலிங்கில் சிறப்பாக செயல்படும் போது பேட்டிங்கில் தடுமாறுகிறோம். நன்றாக பேட்டிங் செய்யும் போது பீல்டிங்கில் சொதப்பி விடுகிறோம்.

எங்களுடைய பீல்டிங் அணுகுமுறை சரியானதாக இருக்கவில்லை. பீல்டிங்கில் வீரர்கள் கூடுதல் முயற்சி எடுப்பதுடன், நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். வேறு சிந்தனைகள் இன்றி பந்து மீதே முழு கவனமும் இருக்க வேண்டும். பந்து உங்களிடம் வரும் போது ஒரு பீல்டராக முனைப்புடன் இருக்க வேண்டியது அவசியமானதாகும். இது, ஒரு பீல்டிங் குழுவாக எங்களிடம் சற்று குறைவாக இருப்பதாக நினைக்கிறேன்.

மொத்தத்தில் இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன். இனி வரும் ஆட்டங்களில் வேறு விதமான திட்டமிடல், வித்தியாசமான மனநிலையுடன் அணிக்குள் நம்பிக்கையான சூழலை கொண்டு வர முயற்சிப்போம்."

இவ்வாறு பாபர் அசாம் கூறினார்.


Next Story