உலக கோப்பை கிரிக்கெட்; அத்துமீறிய ரசிகருக்கு ஐ.சி.சி. தடை


உலக கோப்பை கிரிக்கெட்; அத்துமீறிய ரசிகருக்கு ஐ.சி.சி. தடை
x
தினத்தந்தி 9 Oct 2023 2:30 AM IST (Updated: 9 Oct 2023 6:29 AM IST)
t-max-icont-min-icon

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பார்க்க கிரிக்கெட் ரசிகர் ஜார்வோவுக்கு ஐ.சி.சி. தடை விதித்து உள்ளது.

சென்னை,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. பீல்டிங் செய்ய இந்திய வீரர்கள் களம் இறங்கியபோது திடீரென ஒரு ரசிகர் இந்திய அணிக்குரிய நீலநிற சீருடையுடன் ஸ்டேடியத்திற்குள் ஓடி வந்தார். கோலியை நோக்கி வந்த அவரை பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து சென்றனர்.

விசாரணையில் அந்த ரசிகர் பெயர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டேனியல் ஜார்விஸ் என தெரிய வந்தது. அவர் ஜார்வோ 69 என்றும் அழைக்கப்படுகிறார். போட்டிகளின்போது, பாதுகாப்பை மீறி விளையாட்டு திடலுக்குள் நுழைந்ததற்காக, அவர் மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பார்வையாளராக கலந்து கொள்ள அவருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

போட்டியுடன் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை அளிப்பதே எங்களுடைய நோக்கம். இதுபோன்று மீண்டும் நடைபெறாமல் தடுக்க, கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்பட்டால் அதுபற்றி பரிசீலிக்கப்படும் என ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த விவகாரம் பற்றி இந்திய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்றும் தெரிவித்து உள்ளது. இவர் ஏற்கனவே இங்கிலாந்தில் இதே போல் 3 முறை கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி இருக்கிறார். இதனால் அங்கு அவருக்கு விளையாட்டு மைதானங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அந்த ரசிகர் சமூக வலைதளத்தில் 'டிரென்டிங்' ஆகியுள்ளார். 'மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா....' என்று ஒரு ரசிகர் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார். 2021-ம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த 2-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி தொடரின்போதும் ஜார்வோ இதுபோன்று இடையூறு ஏற்படுத்தினார்.


Next Story