சர்வதேச கால்பந்து கோல்கள் : பீலேவின் சாதனையை சமன் செய்தார் சுனில் சேத்திரி


சர்வதேச கால்பந்து கோல்கள் : பீலேவின் சாதனையை சமன் செய்தார் சுனில் சேத்திரி
x
தினத்தந்தி 11 Oct 2021 10:41 AM GMT (Updated: 11 Oct 2021 10:41 AM GMT)

இந்த போட்டியில் சுனில் சேத்திரி அடித்த கோல் அவரது 77 வது சர்வதேச கோலாகும். இதன் மூலம் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சர்வதேச கோல் எண்ணிகையை சுனில் சேத்திரி சமன் செய்துள்ளார்

மாலத்தீவு

13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

கோப்பையை வெல்லும் முனைப்புடன்  தொடரில் களமிறங்கிய இந்திய அணி முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற முடியாமல் சமனில் முடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு நடந்த வாழ்வா சாவா ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த நேபாள அணியை  எதிர்கொண்டது இந்திய அணி. இந்த போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் நேபாள அணியை வீழ்த்தியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின்  முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்க முடியாமல்  திணறின. இரண்டாவது பாதியின் 83வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்திரி கோல் அடிக்க,  இறுதியில்  இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சுனில் சேத்திரி அடித்த கோல் அவரது 77 வது  சர்வதேச கோலாகும். இதன் மூலம் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சர்வதேச கோல் எண்ணிகையை சுனில் சேத்திரி சமன் செய்துள்ளார்.

13ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியன் மாலத்தீவு அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ள நிலையில் புள்ளி பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் ,தனது கடைசி போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

Next Story