ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி-பெங்களூரு இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி-பெங்களூரு இன்று மோதல்
x

கோப்புப்படம்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னையில் இன்று இரவு நடக்கிறது.

சென்னை,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியனான பெங்களூரு எப்.சி.யை சந்திக்கிறது.

அனிருத் தபா தலைமையிலான சென்னை அணி கொல்கத்தாவில் நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வலுவான ஏ.டி.கே. மோகன் பகானை வீழ்த்தியது. இதே போல் சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை சாய்த்தது. இரு அணிகளும் அதே வெற்றி வேட்கையுடன் களம் இறங்குகிறது.

ரசிகர்கள் முன்னிலையில்....

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 சீசன் போட்டிகள் கோவாவில் மட்டுமே நடந்தது. தற்போது மீண்டும் போட்டி பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. சென்னையில் 2½ ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஐ.எஸ்.எல். அரங்கேறுவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலம் வாய்ந்த அணிகள் மல்லுகட்டுவதால் களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகள் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு அணி 7 முறையும், சென்னை அணி 2 தடவையும் வெற்றி கண்டு இருக்கின்றன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அனிருத் தபா கருத்து

போட்டி குறித்து சென்னையின் எப்.சி. கேப்டன் அனிருத் தபா நேற்று அளித்த பேட்டியில், 'இரு சீசனுக்கு பிறகு சென்னை ரசிகர்கள் முன்னிலையில் விளையாட இருப்பது உற்சாகம் அளிக்கிறது. ரசிகர்கள் மீண்டும் ஸ்டேடியத்துக்கு திரும்பி இருப்பது எங்களுக்கு நல்ல விஷயமாகும். நாங்கள் நிலையான ஆட்ட திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானது. ஏ.டி.கே.மோகன் பகான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பாதியில் நாங்கள் சற்று மெதுவாக விளையாடினோம். இதனால் பந்தை கட்டுப்பாட்டில் வைக்கும் சில வாய்ப்புகளை இழந்தோம். ஆனால் இரண்டாவது பாதியில் சரிவில் இருந்து மீண்டு சிறப்பாக செயல்பட்டோம். அத்தகைய ஆட்டத்தை போட்டி முழுவதும் (90 நிமிடமும்) வெளிப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும். இதே உத்வேகத்துடன் தொடர்ந்து ஆடினால் இந்த சீசன் எங்களுக்கு சிறப்பானதாக அமையும்.

கடைசியாக நாங்கள் 2020-ம் ஆண்டு சென்னையில் கோவாவுக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் ரசிகர்கள் அளித்த அமோக ஆதரவு எங்களுக்கு ஊக்கமளித்தது. இந்த முறையும் ரசிகர்கள் அதே ஆர்வத்துடன் வருவார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் அணிக்காகவும், ரசிகர்களுக்காவும் தான் விளையாடுவோம். எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்' என்று தெரிவித்தார்.

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் பிர்டாரிச் கூறுகையில், 'பெங்களூரு அனுபவம் வாய்ந்த அணி. நாங்கள் மிகவும் கவனமுடன் குறிப்பாக பின்களத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஒரு அணியாக அவர்களை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி, அவர்களின் முழு பலம் வெளிப்படாமல் தடுக்க வேண்டும்' என்றார்.

முன்னதாக கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஐதராபாத் எப்.சி. 3-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) வீழ்த்தியது.


Next Story