பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக முதல் கோலை அடித்து ஸ்பெயின் முன்னிலை


பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக முதல் கோலை அடித்து ஸ்பெயின் முன்னிலை
x
தினத்தந்தி 20 Aug 2023 11:36 AM GMT (Updated: 20 Aug 2023 12:10 PM GMT)

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் கோலை அடித்து ஸ்பெயின் அணி முன்னிலை வகித்து வருகிறது.

சிட்னி,

32 அணிகள் பங்கேற்ற 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந் தேதி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. பிரிஸ்பேனில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சுவீடன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் ஆடிய ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக வெண்கலப்பதக்கத்தை பெற்றது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோதி வருகின்றன. 32 ஆண்டு கால பெண்கள் உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் இறுதிப்போட்டியை எட்டியிராத இரு அணிகள் இறுதியுத்தத்தில் சந்திப்பது இது முதல் தடவையாகும்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி முதல் கோலை அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்மோனா முதல் கோலை அடித்தார்.

இந்த போட்டியில் வெல்லும் அணி முதல்முறையாக கோப்பையை உச்சி முகர்வதுடன் புதிய சாதனையையும் படைக்கும். அதாவது வெற்றி பெறும் அணி ஜெர்மனிக்கு அடுத்தபடியாக ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணி என்ற பெருமையை பெறும். இங்கிலாந்து அணி 1966-ம் ஆண்டும், ஸ்பெயின் அணி 2010-ம் ஆண்டும் ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மகுடம் சூடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story