அஸ்லான் ஷா ஆக்கி: இந்திய அணி கோல் மழை


அஸ்லான் ஷா ஆக்கி: இந்திய அணி கோல் மழை
x
தினத்தந்தி 29 March 2019 9:30 PM GMT (Updated: 30 March 2019 12:40 PM GMT)

6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது.

இபோக், 

6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, போலந்தை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே அதிரடியாக தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி 10-0 என்ற கோல் கணக்கில் போலந்தை போட்டு தாக்கியது. இந்திய அணியில் வருண்குமார் (18–வது, 25–வது நிமிடம்), மன்தீப் சிங் (50–வது, 51–வது நிமிடம்) தலா 2 கோலும், விவேக் பிரசாத் (முதலாவது நிமிடம்), சுமித் குமார் (7–வது நிமிடம்), சுரேந்தர்குமார் (19–வது நிமிடம்), சிம்ரன்ஜீத் சிங் (29–வது நிமிடம்), நீலகண்ட ‌ஷர்மா (36–வது நிமிடம்), அமித் ரோஹிதாஸ் (55–வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். இதேபோல் மற்றொரு லீக் ஆட்டத்தில் தென்கொரியா அணி 4–2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா 4 வெற்றி, ஒரு டிராவுடன் 13 புள்ளியும், தென்கொரியா 4 வெற்றி, ஒரு டிராவுடன் 13 புள்ளியும் பெற்று சமநிலை வகித்தன. கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் இந்திய அணி முதலிடமும், தென்கொரியா அணி 2–வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்திய அணி 8–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) மாலை 6.05 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா–தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் மோதிய லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story