ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு முதல் வெற்றி


ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு முதல் வெற்றி
x
தினத்தந்தி 25 Nov 2021 8:28 PM GMT (Updated: 25 Nov 2021 8:28 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் கனடாவை பந்தாடி முதல் வெற்றியை ருசித்தது.

புவனேஸ்வர்,

12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

வருகிற 5-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, ஜெர்மனி, பெல்ஜியம், பாகிஸ்தான் உள்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் 2-வது நாளான நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, கனடாவை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் கனடாவை எளிதில் தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் பிரான்சிடம் போராடி தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தரப்பில் சஞ்சய், அரய்ஜீத் சிங் ஹூன்டல் தலா 3 கோலும், உத்தம் சிங், ஷர்தனாந்த் திவாரி தலா 2 கோலும், கேப்டன் விவேக் சாகர் பிரசாத், மனிந்தர் சிங், அபிஷேக் லக்ரா தலா ஒரு கோலும் அடித்தனர்.

முன்னதாக நடந்த லீக் ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா 14-0 என்ற கோல் கணக்கில் எகிப்து (டி பிரிவு) அணியையும், நெதர்லாந்து அணி 12-5 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவையும் (சி பிரிவு), ஸ்பெயின் அணி 17-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவையும் (சி பிரிவு) தோற்கடித்தன. மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 7-1 என்ற கோல் கணக்கில் போலந்தை (பி பிரிவு) தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை தனதாக்கியது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா-சிலி (காலை 9.30 மணி), தென்கொரியா-அமெரிக்கா (பகல் 12 மணி), ஸ்பெயின்-நெதர்லாந்து (பிற்பகல் 2.30 மணி), அர்ஜென்டினா-ஜெர்மனி (மாலை 5 மணி), மலேசியா-பெல்ஜியம் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story