குளிர்கால ஒலிம்பிக் போட்டி; ரஷியா வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்


குளிர்கால ஒலிம்பிக் போட்டி; ரஷியா வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 23 Feb 2018 10:00 PM GMT (Updated: 23 Feb 2018 8:55 PM GMT)

குளிர்கால ஒலிம்பிக் போட்டி: ரஷியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் 15 வயது வீராங்கனை வென்றார்

பியாங்சாங்,

ஊக்கமருந்து சர்ச்சைகளுக்கு மத்தியில் பியாங்சாங் குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை 15 வயது ஸ்கேட்டிங் வீராங்கனை ஜாகிடோவா வென்றுத் தந்தார்.

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பிகர் ஸ்கேட்டிங் தனிநபர் பிரிவில் ரஷிய இளம் புயல் அலினா ஜாகிடோவா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். சக்கரத்துடன் கூடிய ஷூவை காலில் மாட்டிக்கொண்டு ஐஸ்கட்டி மைதானத்தில் மின்னல் வேகத்தில் வலம் வந்த ஜாகிடோவா, உடலை வில்லாக வளைத்து சாகசம் காட்டியதுடன் துள்ளிகுதித்து அந்தரத்தில் மூன்று தடவை ‘பம்பரம்’ போல் சுழன்றடித்த விதத்தில் ரசிகர்கள், நடுவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

மொத்தம் 239.57 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்ததுடன், இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் ரஷிய வீராங்கனை என்ற சிறப்பையும் 15 வயதான ஜாகிடோவா பெற்றார். மற்றொரு ரஷிய மங்கை 18 வயதான எவ்ஜெனியா மெட்விடேவா வெள்ளிப்பதக்கமும் (238.26 புள்ளி), கனடாவின் கேட்லின் ஒஸ்மான்ட் (231.02 புள்ளி) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

2014-ம் ஆண்டு சோச்சியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கின் போது ரஷிய அரசின் உதவியுடன் அந்த நாட்டு வீரர், வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு கிளம்பியதால், இந்த குளிர்கால ஒலிம்பிக்கில் ரஷியா பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து தகுதிவாய்ந்த ரஷிய வீரர், வீராங்கனைகள் 168 பேர் ‘ரஷியாவில் இருந்து ஒலிம்பிக் விளையாட்டு நபர்’ என்ற பெயரில் அடியெடுத்து வைத்தனர். ஜாகிடோவா கழுத்தில் தங்கப்பதக்கம் அலங்கரித்த போது, ரஷிய தேசிய கொடிக்கு பதிலாக 5 வளையங்கள் கொண்ட ஒலிம்பிக் கொடியே ஏற்றப்பட்டது.

ஆண்களுக்கான 1,000 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் நெதர்லாந்து வீரர் கிஜெல்டு நுயிஸ் 1 நிமிடம் 07.97 வினாடிகளில் இலக்கை எட்டி 2-வது தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். அவரை விட 0.04 வினாடி மட்டுமே பின்தங்கிய நார்வே வீரர் ஹவர்ட் லோரென்ட்ஜென் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

ஆண்களுக்கான ஐஸ்ஆக்கி போட்டியின் அரைஇறுதி ஆட்டங்களில் ஜெர்மனி 4-3 என்ற கோல் கணக்கில் கனடாவையும், ரஷியா 3-0 என்ற கோல் கணக்கில் செக்குடியரசையும் தோற்கடித்தது. நாளை நடைபெறும் தங்கப்பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் ரஷியா-ஜெர்மனி அணிகள் மோத உள்ளன.

இந்த ஒலிம்பிக் திருவிழா நாளை நிறைவடைய உள்ள நிலையில் நார்வே அணி 13 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலம் என்று 37 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்திலும், ஜெர்மனி 13 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன.

இதற்கிடையே மேலும் ஒரு ரஷியர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். சக்கரம் பொருத்தப்பட்ட குட்டி வாகனத்தில் 2 பேர் அமர்ந்து, குறுகிய வளைவுகள் கொண்ட சரிவான பாதையில் சீறிப்பாயக்கூடிய ‘பாப்ஸ்லை’ பந்தயத்தில் 14-வது இடத்துக்கு தள்ளப்பட்ட ரஷிய வீராங்கனை நட்ஜா செர்ஜீவா ஊக்கமருந்து பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்துள்ளது. இதய பிரச்சினைக்காக அவர் எடுத்துக் கொண்ட மருந்து, உலக ஊக்கமருந்து தடுப்பு கழகத்தால் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் இருப்பதாக ரஷிய பாப்ஸ்லை பெடரேஷன் கூறியுள்ளது.

ஏற்கனவே கலப்பு இரட்டையர் ‘கர்லிங்’ பிரிவில் தனது மனைவியுடன் இணைந்து வெண்கலப்பதக்கம் வென்ற ரஷிய வீரர் அலெக்சாண்டர் ருஷெல்னிட்ஸ்கி ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதால், அவரது பதக்கம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story