துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 18 May 2019 10:13 PM GMT (Updated: 18 May 2019 10:13 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடந்தது.


* பாகிஸ்தானில் 2009-ம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு அந்த நாட்டுக்கு சென்று விளையாட பெரும்பாலான கிரிக்கெட் அணிகள் மறுத்து வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்து வருகிறது. இது தொடர்பாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் புதிய பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

* இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள் உள்ளூர் போட்டிகளின் மேம்பாடு குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அடுத்த சீசனில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘நாக்-அவுட்’ சுற்று ஆட்டங்களில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் (டி.ஆர்.எஸ்.) முறையை அமல்படுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் வற்புறுத்தினார்கள். இதனால் அடுத்த சீசனில் டி.ஆர்.எஸ். முறை அமல்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

* இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் அங்கம் வகிக்கும் சென்னையின் எப்.சி. அணி, ஐ லீக் போட்டிக்கான சென்னை சிட்டி எப்.சி. அணியில் இடம் பெற்று இருந்த பின்கள வீரர் எட்வின் வான்பாலை 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து இருக்கிறது. 26 வயதான எட்வின் வான்பால் தமிழகத்தில் உள்ள நெய்வேலியை சேர்ந்தவர் ஆவார். ‘சென்னையின் எப்.சி. அணியில் இணைவது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு’ என்று எட்வின் வான்பால் கருத்து தெரிவித்துள்ளார்.

* ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ப்பூரை உள்ளூர் மைதானமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சில ஆட்டங்களில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபரா ஸ்டேடியத்தை தங்களது சொந்த மைதானமாக கொண்டு விளையாட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகிகள் மற்றும் அந்த அணியின் இளம் வீரர் ரியான் பராக் ஆகியோர் பார்சபரா ஸ்டேடியத்தில் இருக்கும் வசதிகளை நேற்று நேரில் பார்த்தனர். ‘ஐ.பி.எல். போட்டி அசாமில் அரங்கேறும்’ என்று அசாம் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் திபோஜித் சைகியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரபூர்வ பாடலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. ‘ஸ்டான்ட் பை’ என்ற தலைப்பில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற பாடகர் லாரின் இந்த பாடலை பாடியுள்ளார். இங்கிலாந்தின் பாரம்பரிய இசை கலவையுடன் அமைந்துள்ள இந்த பாடல் ரசிகர்களை அதிகம் கவரும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Next Story