பிற விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா ஓய்வு + "||" + Malinga retires as Sri Lanka's leading fast bowler

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளார்.

* இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான 36 வயது மலிங்கா கொழும்பில் வருகிற 26-ந் தேதி நடைபெறும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்த தகவலை இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே கொழும்பில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.


* இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டி தொடரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தசைப்பிடிப்பு காயத்தால் பாதிக்கப்பட்ட பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா போட்டி தொடரில் இருந்து விலகினார். அவரது காயம் குணமடைந்து வருகிறது. அவர் பயிற்சியில் லேசாக ஈடுபட தொடங்கி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக உடல் தகுதி பெற்று முதல் போட்டி தேர்வுக்கு தயார் ஆகிவிடுவார் என எதிர்பார்க்கிறேன்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* இந்த மாதத்தில் ஐரோப்பிய கண்டத்தில் நடந்த சர்வதேச தடகள போட்டிகளில் இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஒட்டப்பந்தயங்களில் சேர்த்து 5 தங்கப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார். தங்கப்பதக்கம் வென்ற அசாமை சேர்ந்த 19 வயதான ஹிமா தாஸ்க்கு பிரதமர் மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி, அவரது மனைவியும் இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோரும் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு, ஹிமா தாஸ் நன்றி தெரிவித்துள்ளார். அதில் நான் உங்களது தீவிர ரசிகை என்று குறிப்பிட்டுள்ளார்.

* ‘2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயார் படுத்தும் வகையில் 27 வகையான விளையாட்டுகளை சேர்ந்த 14,236 திறமையான வீரர்-வீராங்கனைகளுக்கு பல்வேறு பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 4,269 பேர் பெண்கள் ஆவர். ஒலிம்பிக் பதக்க திட்டத்தின்படி 295 வீரர்-வீராங்கனைகளுக்கு உலக தரம் வாய்ந்த பயிற்சிகள் உள்நாடு மட்டும் வெளிநாடுகளில் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் மாதாந்திர செலவுக்கு நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது’ என்று மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.