மல்யுத்தத்தை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் - பஜ்ரங் பூனியா வலியுறுத்தல்


மல்யுத்தத்தை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் - பஜ்ரங் பூனியா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Sep 2019 11:45 PM GMT (Updated: 24 Sep 2019 11:45 PM GMT)

மல்யுத்தத்தை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என பஜ்ரங் பூனியா வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

சமீபத்தில் கஜகஸ்தானில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மொத்தம் 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. தீபக் பூனியா வெள்ளிப்பதக்கமும், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், ராகுல் அவாரே, ரவிகுமார் தாஹியா ஆகியோர் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். இவர்களுக்கு டெல்லியில் நேற்று விளையாட்டு அமைச்சகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, தீபக் பூனியாவுக்கு ரூ.7 லட்சமும், மற்றவர்களுக்கு தலா ரூ.4 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனும் கலந்து கொண்டார்.

பின்னர் இந்திய ‘நம்பர் ஒன்’ மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா கூறுகையில், ‘உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக பதக்கம் வென்று தரும் விளையாட்டாக மல்யுத்தம் திகழ்கிறது. இந்த விளையாட்டை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த மந்திரி கிரண் ரிஜிஜூ, ‘ஒரு விளையாட்டுத்துறை மந்திரியாக நான் அனைத்து விளையாட்களுக்கும் சரிசம முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதில் நான் பாகுபாடு காட்ட முடியாது. இந்தியாவில் மல்யுத்தம் முக்கியமான ஒரு போட்டி தான். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வெற்றிகளை குவித்து இந்தியாவுக்கு பெருமை தேடிதருகிறார்கள். ஆனாலும் நாங்கள் ஒலிம்பிக் விளையாட்டுகளோடு, ஒலிம்பிக் அல்லாத விளையாட்டுகளுக்கும், பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தாக வேண்டும். குறிப்பிட்ட ஒரு விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிவிக்கும் போது, அது உணர்வு பூர்வமான சிக்கலை உருவாக்கி விடும். அதனால் இது பற்றி விவாதித்து தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்த விரும்பவில்லை.’ என்றார்.

Next Story