இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ரத்து


இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ரத்து
x
தினத்தந்தி 29 Sep 2019 11:22 PM GMT (Updated: 29 Sep 2019 11:22 PM GMT)

இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.


* இந்திய ஆண்கள் ஆக்கி அணி பெல்ஜியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஆன்ட்வெர்ப்பில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை பந்தாடியது. ஹர்மன்பிரீத் சிங் 2 கோலும், ஆகாஷ்தீப்சிங், எஸ்.வி.சுனில், ரமன்தீப்சிங் தலா ஒரு கோலும் அடித்தனர். முந்தைய ஆட்டத்திலும் இந்தியா ஸ்பெயினை வென்று இருந்தது. இந்திய அணி அடுத்து உலகின் 2-ம் நிலை அணியான பெல்ஜியத்தை நாளை சந்திக்கிறது.

* இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி சூரத்தில் நேற்றிரவு நடக்க இருந்தது. முந்தைய நாள் பெய்த மழை காரணமாக அவுட்பீல்டு மோசமாக இருந்தது. இதனால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

* இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கராச்சியில் நடக்க இருந்த முதலாவது ஒரு நாள் போட்டி பலத்த மழையால் டாஸ் கூட போடப்படாமல் ரத்தானது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கராச்சியில் இன்று நடக்கிறது. இன்று மழை வாய்ப்பு இல்லை என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்டுள்ள காயத்துக்கும், அவர் பந்து வீசும் முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் தனது பந்து வீசும் ஸ்டைலில் அவர் மாற்றம் செய்ய தேவையில்லை. ஒருவேளை மாற்றம் செய்ய முயற்சித்தால், அது நன்றாக இருக்காது’ என்றார்.

* பெங்களூருவில் நடந்த பெண்களுக்கான ஆசிய கூடைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பான் 71-68 என்ற புள்ளி கணக்கில் சீனாவை சாய்த்து தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.


Next Story