பிற விளையாட்டு

தேசிய விளையாட்டு விருதுக்கு ஜூன் 3-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு + "||" + Applications for the National Sports Award by June 3: Central Sports Ministry announces

தேசிய விளையாட்டு விருதுக்கு ஜூன் 3-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு

தேசிய விளையாட்டு விருதுக்கு ஜூன் 3-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கு விருப்பமுள்ள வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட விளையாட்டு துறையினர் ஜூன் 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி, 

விளையாட்டில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்- வீராங் கனைகளுக்கு ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சர்வதேச போட்டிகளில் ஜொலித்து நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’ ஆகிய உயரிய விருதுகளை வழங்கி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் கவுரவித்து வருகிறது. கேல்ரத்னா விருது பெறுபவருக்கு ரூ.7½ லட்சமும், அர்ஜூனா விருது பெறுபவருக்கு ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அத்துடன் சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு துறைக்கு நீண்டகாலம் சேவையாற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான்சந்த்’ விருதும் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தேசிய விளையாட்டு விருதுக்கு தகுதியான நபர்களின் பெயர்களை அந்தந்த விளையாட்டுக்கான தேசிய சம்மேளனங்கள், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யும். இதனை மத்திய அரசு அமைத்துள்ள விருது கமிட்டி ஆராய்ந்து பார்த்து தகுதியான நபர்களின் பெயரை தேர்வு செய்து மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும். அதன் பின்னர் அது இறுதி செய்யப்பட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கும் பணியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய விளையாட்டு விருதுக்கு விருப்பம் உள்ள நபர்கள் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த முறை தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது ஒரிஜினல் விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்க வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது பெயரை பரிந்துரை செய்யும் சம்மேளனங்களின் கையெழுத்துடன் கூடிய விண்ணப்ப படிவத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பியை (நகல்) இ-மெயில் மூலம் கடைசி நாளான ஜூன் 3-ந் தேதிக்குள் அனுப்பினால் போதும்.

கடைசி நாளுக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது. 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் வீரர்களின் செயல்பாடுகள் விருதுக்கான தேர்வில் கவனத்தில் எடுத்து கொள்ளப்படும். ஊக்க மருந்து சோதனையில் சிக்கி தண்டனை பெற்றவர்கள் மற்றும் ஊக்கமருந்து விசாரணை நிலுவையில் இருக்கும் நபர்கள் இந்த விருதுக்கு தகுதி படைத்தவர்கள் கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.